ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில் "நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், முதல் சுற்றுடன் நடையை கட்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஐ.பி.எல்., தொடர் விதிமுறைப்படி, லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் "டாப்-4 இடம் பிடிக்கும் அணிகள் மட்டுமே "பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். தற்போதைய நிலையில் முதல் இரு இடத்தில் உள்ள கோல்கட்டா, டில்லி அணிகள் ஏற்கனவே தகுதி பெற்று விட்டன.
மீதமுள்ள இரு இடங்களுக்கு 5 அணிகள் போட்டியிடுகின்றன. புனே , டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் வாய்ப்பை இழந்து விட்டன.
சென்னை அணியை பொறுத்தவரை 2010, 2011ல் சாம்பியன் பட்டம் வென்ற கையோடு, ஐந்தாவது தொடரில் அடியெடுத்து வைத்தது. ஒவ்வொரு முறையும் தட்டுத் தடுமாறி அடுத்த சுற்றுக்கு சென்று விடும் சென்னை அணிக்கு, இம்முறை அதிர்ஷ்டம் அடிக்குமா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், சமீபகாலமாக தோனியின் வியூகங்கள் எதுவும், வெற்றிக்கு உதவவில்லை.
முதல் போட்டியில் மும்பைக்கு எதிராக, கடைசி ஓவரில் வீழ்ந்தது. தவிர, புனே, கோல்கட்டா மற்றும் மும்பைக்கு எதிரான போட்டிகளில், கடைசி ஓவரில் வெற்றி கை நழுவியதால், பெரும் சிக்கலில் தவிக்கிறது.
பலவீனம் அதிகம்:
சரியான துவக்கம் கிடைக்காதது, பின்வரிசையில் போட்டியை முடித்து தரும் "ஆல் ரவுண்டர்கள் இல்லாதது, அஷ்வின், போலிஞ்சர் போன்றவர்கள் விக்கெட் வீழ்த்த தடுமாறுவது போன்றவை, சென்னை அணிக்கு தீராத தலைவலியாக அமைய, இதுவரை பங்கேற்ற 12 போட்டிகளில் 5 வெற்றியுடன் 11 புள்ளிகள் மட்டும் பெற்றுள்ளது.
இப்போதைய நிலையில் கோல்கட்டா, டில்லி அணிகளின் "பிளே ஆப் வாய்ப்பு ஏறக்குறைய உறுதியாகி விட்டது. மும்பை அணியும் (11 போட்டி, 14 புள்ளி), மீதமுள்ள 5 போட்டியில் 2ல் வென்றால் கூட மூன்றாவது அணியாக, அடுத்த சுற்றுக்குள் நுழைய பிரகாசமான வாய்ப்புள்ளது.
யாருக்கு ஓரிடம்:
மீதமுள்ள ஒரு இடத்தை பிடிக்க, சென்னை, ராஜஸ்தான், பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. சென்னை அணியை பொறுத்தவரையில், அடுத்து வரும் 4 போட்டிகளில் (ராஜஸ்தான், டில்லி, கோல்கட்டா, பஞ்சாப்), கட்டாயம் 3 ல் வென்றால் தான், அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும்.
இதில் ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளை, சென்னை கட்டாயம் வீழ்த்தும் பட்சத்தில், அந்த அணிகள், மீதமுள்ள போட்டிகளில் அனைத்திலும் வென்றாக வேண்டிய நிலை ஏற்படும். அதாவது ராஜஸ்தான் (3 போட்டி), பஞ்சாப் (4 போட்டி) அணிகள் ஒரு போட்டியில் தோற்றாலும், சென்னை அணிக்கு வாய்ப்பு பிரகாசமாகும்.
அதேபோல பெங்களூரு அணி, மும்பைக்கு எதிராக 2 போட்டி, டில்லி, டெக்கான் மற்றும் புனே என பங்கேற்கும் 5 போட்டிகளில் குறைந்தது 3ல் அதிக "ரன்ரேட்டுடன் வெல்ல வேண்டும். இல்லையெனில், நான்காவது அணியாக சென்னை எளிதாக முன்னேறிவிடும்.
0 comments:
Post a Comment