கோல்கட்டாவில் கங்குலிக்கு சோகம்

ஐ.பி.எல்., லீக் போட்டியில் கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி, 7 ரன்கள் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்றது. கோல்கட்டா அணிக்கு பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புனே வாரியர்ஸ் அணி கங்குலியின் சொந்தமண்ணில் மண்ணை கவ்வியது.

ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரின் 47 வது லீக் போட்டியில் கங்குலியின் புனே வாரியர்ஸ் அணி, காம்பிரின் கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணியை சந்தித்தது. "டாஸ்' வென்ற காம்பிர் "பேட்டிங்' தேர்வு செய்தார். கோல்கட்டா அணியில் பிரட் லீ நீக்கப்பட்டு, டிலாங்கே சேர்க்கப்பட்டார்.


"சூப்பர்' துவக்கம்:

கோல்கட்டா அணிக்கு காம்பிர், பிரண்டன் மெக்கலம் ஜோடி மீண்டும் ஒருமுறை சூப்பர் துவக்கம் கொடுத்தது. கார்த்திக் வீசிய முதல் ஓவரில் பவுண்டரி அடித்து ரன் கணக்கை துவக்கிய காம்பிர், டிண்டா பந்தை சிக்சருக்கு விரட்டினார்.

மறுபுறம், பிரண்டன் மெக்கலம் தன்பங்கிற்கு பார்னல் பந்தில் அசத்தலான சிக்சர் அடித்தார். தொடர்ந்து டிண்டா ஓவரில் அடுத்தடுத்து சிக்சர், பவுண்டரி என, காம்பிர் விளாச, கோல்கட்டா அணி 6 ஓவரில் 68 ரன்கள் எடுத்தது.


காம்பிர் அரைசதம்:

கிளார்க் பந்தில் பவுண்டரி அடித்த காம்பிர், 30 வது பந்தில் அரைசதத்தை எட்டினார். இது, இத்தொடரில் இவர் எடுக்கும் ஐந்தாவது அரைசதம். இவருக்கு நல்ல "கம்பெனி' கொடுத்த பிரண்டன் மெக்கலம், மாத்யூஸ், பார்னல் பந்துகளில் பவுண்டரிகள் அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 12.3 ஓவரில் 113 ரன்கள் சேர்த்த நிலையில், காம்பிர் (56) கார்த்திக் சுழலில் சிக்கினார்.


திடீர் சரிவு:

இதன் பின் கோல்கட்டா அணிக்கு சரிவு துவங்கியது. காம்பிர் வெளியேறிய சில நிமிடத்தில் பிரண்டன் மெக்கலம் (42) திரும்பினார். கைகொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட காலிஸ், ஒரு ரன்னுடன் கைவிட்டு வெளியேறினார். வழக்கம் போல தடுமாறிய யூசுப் பதான், 15 பந்துகளில் 11 ரன்கள் மட்டும் எடுத்து அவுட்டானார்.

சுக்லாவும் "டக்' அவுட்டாக, அணியின் ரன்வேகம் அப்படியே "படுத்தது'. 10.3 வது ஓவருக்குப் பின், கடைசி வரை பவுண்டரி அடிக்கப்படவே இல்லை. தாஸ் மட்டும் கடைசி நேரத்தில் ஒரு சிக்சர் அடித்தார். கோல்கட்டா அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 150 ரன்கள் மட்டும் எடுத்தது. தாஸ் (15), திவாரி (6) அவுட்டாகாமல் இருந்தனர்.


கிளார்க் அதிர்ச்சி:

எட்டிவிடும் இலக்கை விரட்டிய புனே அணிக்கு, இம்முறை உத்தப்பாவுடன் துவக்க வீரராக வந்த மைக்கேல் கிளார்க், ஒரு ரன்னில் போல்டாகி அதிர்ச்சி கொடுத்தார். இக்பால், டிலாங்கே பந்துகளில் பவுண்டரி அடித்த <உத்தப்பா (17) மறுபடியும் சொதப்பினார்.

இரண்டு பவுண்டரி அடித்த திருப்தியுடன் மனிஷ் பாண்டேவும், 17 ரன்னுடன் பெவிலியன் திரும்பினார். மிதுன் மன்ஹாஸ் (1) நிலைக்கவில்லை. ஸ்டீபன் ஸ்மித் (14) அம்பயரின் தவறான தீர்ப்பில் எல்.பி.டபிள்யு ஆக, புனே அணி 9 ஓவரில் 55 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.


மாத்யூஸ் ஆறுதல்:

இதன் பின் மாத்யூஸ், கங்குலி இணைந்தனர். வந்த வேகத்தில் காலிஸ் பந்தில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடித்த கங்குலி, சுனில் நரைன் பந்தையும் பவுண்டரிக்கு விரட்டினார். இதன் பின், இந்த ஜோடி ஒவ்வொரு ரன்னாக எடுக்க, தேவையான "ரன்ரேட்' எகிறியது.

இந்நிலையில் யூசுப் பதான் வீசிய போட்டியின் 15 வது ஓவரில், மாத்யூஸ் "ஹாட்ரிக்' சிக்சர் அடித்து மிரட்டினார். மறுபுறம் பாட்யாவின் பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார் கங்குலி. பாட்யாவின் அடுத்த ஓவரில் சிக்சர் அடித்த கங்குலி (36), அவரிடமே சிக்க, போட்டியில் திருப்புமுனை ஏற்பட்டது.


புனே தோல்வி:

பார்னல் ஒரு ரன்னில் அவுட்டானார். சுனில் நரைன் வீசிய 19வது ஓவரில் 4 ரன்கள் மட்டும் எடுக்கப்பட, புனே அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட்டது.

டிலாங்கே வீசிய இந்த ஓவரின் முதல் பந்தில் மாத்யூஸ் ஒரு ரன் எடுத்தார். அடுத்த இரு பந்தில் ஒரு பவுண்டரி உட்பட 5 ரன்கள் எடுக்கப்பட்டன. நான்காவது பந்தில் மாத்யூஸ் (35) அவுட்டானார். கடைசி இரு பந்தில் 12 ரன் தேவை என்ற நிலையில், புவனேஷ்வர் ஒரு பவுண்டரி மட்டும் அடித்தார்.

புனே வாரியர்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்து, 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.


"பெஸ்ட் பார்ட்னர்ஷிப்'

நேற்றைய போட்டியில் கோல்கட்டாவின் காம்பிர், மெக்கலம் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்தனர். ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா அணி சார்பில் முதல் விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இது தான். இதற்கு முன் 2010 தொடரில் பிராட் ஹாட்ஜ், மனோஜ் திவாரி இணைந்து 101 ரன்கள் எடுத்திருந்தனர்.

1 comments:

  1. மே தின வாழ்த்துகள்
    உங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

    தமிழ்.DailyLib

    we can get more traffic, exposure and hits for you

    To link to Tamil DailyLib Logo or To get the Vote Button
    தமிழ் DailyLib Vote Button

    உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்

    நன்றி
    தமிழ்.DailyLib

    ReplyDelete