ஐ.பி.எல்., தொடரின் பைனலுக்கான இரண்டாவது தகுதிப் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெற்று மீண்டும் ஒரு முறை பைனலுக்கு முன்னேற சென்னை அணி காத்திருக்கிறது.
ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரின் "பிளே ஆப்' போட்டிகள் தற்போது நடக்கின்றன. முதல் தகுதிப் போட்டியில் வென்ற கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி, பைனலுக்கு தகுதி பெற்றது. அடுத்த போட்டியில் (எலிமினேட்டர்)சென்னை அணி, மும்பையை வீழ்த்தியது.
மும்பை அணி தொடரில் இருந்து வெளியேறியது. இன்று நடக்கும் இரண்டாவது தகுதிப் போட்டியில் சென்னை அணி, டில்லி டேர்டெவில்சை சந்திக்கிறது.
வீண் விமர்சனம்:
"நடப்பு சாம்பியன்' சென்னை அணி, லீக் சுற்றில் தடுமாறியது. பின் "ரன்ரேட்' அடிப்படையில் நான்காவது அணியாக "பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறியது. மும்பைக்கு எதிரான "எலிமினேட்டர்' போட்டியில் அசத்தல் வெற்றி பெற்ற சென்னை அணி விமர்சனங்களை தவிடுபொடியாக்கியது.
இப்போட்டியில் துவக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட் வீழ்ந்த போதும், அடுத்து வந்த அனுபவ மைக்கேல் ஹசி, பத்ரிநாத், பிராவோ ஆகியோர் பேட்டிங்கில் எழுச்சி பெற்றனர். 20 பந்துகளில் அரைசதம் எட்டிய கேப்டன் தோனியின் "ஆவேச' பேட்டிங், இன்றும் தொடர்ந்தால், நான்காவது முறையாக சென்னை அணி பைனலுக்கு தகுதி பெறலாம்.
கடந்த முறை ஏமாற்றிய ரெய்னா, முரளி விஜய் சுதாரித்துக் கொள்ள வேண்டும். சென்னை அணிக்காக இத்தொடரில் அதிக ரன்கள் (398) எடுத்த டுபிளசியை, தொடர்ந்து வீணடிப்பது ஏனோ தெரியவில்லை. அதேநேரம், தொடர்ந்து சொதப்பும் "ரூ. 10 கோடி' ரவிந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பு தருவதன் மர்மம் புரியவே இல்லை. பின் வரிசையில் ஆல்பி மார்கல் ஆறுதல் தரலாம். உடற்தகுதியில் தேறினால், அனிருதா ஸ்ரீகாந்த்தை இன்று களமிறக்கலாமே.
ஹில்பெனாஸ் நம்பிக்கை:
பவுலிங்கில் வேகப்பந்து வீச்சாளர் ஹில்பெனாஸ் நம்பிக்கை தருகிறார். ஆல்பி மார்கல், பிராவோவும் இவருக்கு கைகொடுக்கின்றனர். சுழலில் வழக்கம் போல அஷ்வின், நெருக்கடி தருவதுடன் விக்கெட்டும் வீழ்த்த முயற்சிக்க வேண்டும். மும்பை அணிக்கு எதிராக "பேட்டிங் பவர்பிளேயில்' கலக்கிய ஜகாதிக்கு இன்றும் இடம் தர வேண்டும்.
சேவக் மிரட்டல்:
டில்லி அணியை பொறுத்தவரையில் 2008, 2009 தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற்றது தான் அதிகபட்ச சாதனை. 2010ல் ஐந்தாவது இடத்துடன் நடையை கட்டிய இந்த அணி, 2011ல் கடைசி இடம் பெற்று வெளியேறியது.
இம்முறை எழுச்சி கண்ட இந்த அணி, பங்கேற்ற 16 போட்டிகளில் 11 ல் வென்று முதலிடத்தை பெற்றது. இருப்பினும், கோல்கட்டாவுக்கு எதிரான "பிளே ஆப்' போட்டியில் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. பெங்களூரு அணி கெய்லை நம்பியதைப் போல, டில்லி அணி பெரும்பாலும் கேப்டன் சேவக், வார்னரை மட்டும் நம்புவது பின்னடைவான விஷயம்.
இவர்கள் ஏமாற்றினால் அவ்வளவு தான். அடுத்து வரும் ஜெயவர்தனா, நமன் ஓஜா, வேணுகோபால், இர்பானும் வரிசையாக நடையை கட்டுவர். சமீபத்தில் பார்முக்கு திரும்பிய ராஸ் டெய்லரை சற்று முன்னதாக களமிறக்கினால், ரன்வேகத்தை அதிகரிக்கலாம்.
தொடருமா ஆதிக்கம்
சென்னை சேப்பாக்கத்தில் டில்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக பங்கேற்ற 4 போட்டிகளிலும் சென்னை அணி தான் வென்றுள்ளது.
* இத்தொடரில் இரு அணிகள் மோதிய 2 லீக் போட்டிகளில், தலா ஒரு வெற்றி பெற்றன.
மழை வருமா
இன்று போட்டி நடக்கும் சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும். மழை வருவதற்கு 20 சதவீத வாய்ப்பு உள்ளது.
0 comments:
Post a Comment