சென்னைக்கு கிடைத்தது பிளே ஆஃப் வாய்ப்பு

ஐபிஎல் சீஸன் 5 போட்டிகளில் இன்று ஹைதராபாத்தில் நடைபெற்ற 71வது போட்டியில் டெக்கான் சார்ஜஸ் அணி, ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வெற்றி கொண்டது. பெங்களூரு அணிக்கு மிக முக்கியமான போட்டியான இதில், பெங்களூரு அணி தோற்றது.


முன்னதாக, பெங்களூரு அணி டாஸ் வென்றது. முதலில் பந்து வீசுவதாக அறிவித்த பெங்களூரு அணி, டெக்கான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

இதை அடுத்து களம் இறங்கிய டெக்கான் அணியில் துவக்க வீரர்களின் மோசமான செயல்பாட்டால் அணியின் ரன்குவிப்பு தடைப்பட்டது. அந்த அணியில் சதீஷ் தவான் முதல் ஓவரிலேயே விக்கெட்டைப் பறிகொடுத்தார். அவர் ஒரு பவுண்டரியுடன் 4பந்துகளில் 5 ரன் எடுத்தார்.

அவருடன் களம் இறங்கிய ரெட்டி 11 பந்துகளில் 7 ரன்னுக்கு நடையைக் கட்டினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒயிட் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார். இதனால் 3 விக்கெட்டுகள் மளமளவென சரிந்த நிலையில், சங்ககராவும் டுமினியும் ஆட்டத்தை நிதானமாகத் தொடர்ந்தனர். சங்ககரா 22 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 15 ரன் எடுத்தார்.

டுமினி 53 பந்துகளில் 5 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 74 ரன்களை எடுத்தார். இதனால் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. இருவரும் ஆட்டம் இழந்த பிறகு மீண்டும் விக்கெட்டுகள் மள மளவென விழுந்தன. பார்த்திவ் படேல் 16 ரன்னிலும், ஆஷிஷ் ரெட்டி 4 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். 20 ஓவர் முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 132 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் பெங்களூரு அணிக்கு 133 ரன் என்ற எளிய இலக்கை நிர்ணயித்தது டெக்கான் அணி.

இதை அடுத்து களம் இறங்கிய பெங்களூர் அணியின் துவக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் சரவெடியாக வெடித்தார். 10 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரி அடித்து 27 ரன் எடுத்திருந்த நிலையில் ஸ்டைன் பந்தில் போல்டானார். உடன் இறங்கிய தில்ஷன் 4 ரன்களே எடுத்தார். இதற்காக அவர் எதிர்கொண்ட பந்துகள் 12.

அடுத்து களம் இறங்கிய விராத் கோலி 40 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 42 ரன் எடுத்தார். உடன் திவாரி 27 பந்துகளில் தலா ஒரு சிக்ஸர் பவுண்டரி அடித்து 30 ரன் எடுத்தார். இவர்கள் இருவரும் ஆட்டம் இழந்தபிறகு அணியின் ரன் வேகம் குறைந்தது.

விரைந்து ரன் எடுக்க முனைந்து அனைவருமே ஒற்றை இலக்கங்களில் ஆட்டம் இழந்தனர். பெங்களூரு அணியின் மற்ற விக்கெட்டுகள் மள மளவென சரிய அந்த அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 123 ரன்னே எடுக்க முடிந்தது.

இதை அடுத்து டெக்கான் அணி தனது இறுதிப் போட்டியில் 9 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. இதை அடுத்து, சென்னை அணி 4ம் இடத்தில் நீடித்து, பிளே ஆஃப் சுற்றில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றது.

0 comments:

Post a Comment