சரியான பதிலடி

ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில் சொந்த அணிகளால் புறக்கணிக்கப்பட்ட கங்குலி, டிராவிட் மனம் தளர்ந்து விடவில்லை. மற்ற அணிகளின் கேப்டன்களாக சிறப்பாக செயல்பட்டு, சரியான பதிலடி கொடுத்துள்ளனர்.

முதன் முதலாக 2008ல் ஐ.பி.எல்., துவங்கப்பட்ட போது, கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்தவர் "கோல்கட்டா பிரின்ஸ்' கங்குலி. இத்தொடரில் கோல்கட்டா அணி பங்கேற்ற 14 போட்டிகளில் 6ல் வெற்றி மட்டும் பெற்றது. இதனால், 2009ல் சுழற்சி முறை கேப்டன் என்ற பெயரில், கங்குலி சாதாரண வீரராக களமிறங்கினார். கடைசியில் இதுவும் சொதப்ப, 2010ல் கங்குலி மீண்டும் கேப்டனானார்.


முடிந்த கதை:

இம்முறை 14 போட்டியில் 7 வெற்றி கிடைத்தது. வெறுத்துப்போன அணி உரிமையாளர் ஷாருக்கான், 2011ல் கங்குலியை கைவிட்டார். பின் நடந்த வீரர்களுக்கான ஏலத்தில் கங்குலியை வாங்க எந்த அணியும் முன்வரவில்லை. இதையடுத்து, கங்குலியின் ஐ.பி.எல்., ஆட்டம் ஏறக்குறைய முடிவுக்கு வந்தது.


திடீர் அதிர்ஷ்டம்:

பின் திடீரென புனே வாரியர்ஸ் பெரும் முயற்சி எடுத்து கங்குலியை ஏலத்தில் எடுக்க, 2011ல் 4 போட்டியில் பங்கேற்று 50 ரன்கள் எடுத்தார். தற்போதைய தொடரில் புனே அணியின் "ரெகுலர்' கேப்டன் யுவராஜ் சிங், "கேன்சரால்' பாதிக்கப்பட, கேப்டன் அதிர்ஷ்டம் கங்குலிக்கு அடித்தது.

இம்முறை காரம் குறையாத கங்குலியாக ஜொலித்தார். டில்லி அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் 41 ரன்கள் எடுத்ததுடன், 2 விக்கெட்டும் வீழ்த்தி ஆல் ரவுண்டராக மிரட்டினார். புனே அணி பங்கேற்ற முதல் 8 போட்டிகளில் 4 போட்டியில் வெற்றி பெற்றது.


டிராவிட் புறக்கணிப்பு:

இதேபோல, 2008ல் பெங்களூரு அணிக்கு கேப்டனாக இருந்த டிராவிட், 14 போட்டிகளில் 4 வெற்றி மட்டும் பெற்றுத் தந்தார். இதனால், 2009ல் பீட்டர்சனை கேப்டனாக அறிவித்தார் அணி உரிமையாளர் விஜய் மல்லையா. இவர் பாதியில் நாடு திரும்ப, கும்ளே கேப்டனானார்.


மீண்டும் அசத்தல்:

2011ல் பெங்களூரு அணி விராத் கோஹ்லியை மட்டும் தக்கவைத்துக்கொண்டது. இதனால் பொது ஏலத்துக்கு வந்த டிராவிட், ராஜஸ்தான் அணிக்கு சென்றார். அங்கு 2011ல் 12 போட்டிகளில் பங்கேற்று 343 ரன்கள் எடுத்தார். இம்முறை வார்ன் ஓய்வு பெற்றதால், கேப்டன் பொறுப்பு டிராவிட்டுக்கு தேடி வந்தது.

ஐந்தாவது தொடரில் டிராவிட்டை மட்டும் நம்பி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் சற்று பலவீனமான அணியாக தெரிந்தது. ஆனால், துவக்கத்தில் இருந்தே மற்ற அணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இதுவரை பங்கேற்ற 8 போட்டிகளில் 4 ல் வெற்றி பெற்றது. அணியின் இளம் வீரர் ரகானே, ஓவேஸ் ஷா இருவரும் ரன்மழை பொழிகின்றனர்.

மொத்தத்தில், 2011ல் தங்களது சொந்த அணிகளால் புறக்கணிக்கப்பட்ட கங்குலி, டிராவிட் தான், இந்த தொடரில் சிறந்த கேப்டன்களாக அசத்தி வருகின்றனர்.

1 comments:

  1. அருமையான பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete