ஜொலிப்பார்களா புதிய நட்சத்திரங்கள்

ஐ.பி.எல்., தொடரில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்று அசத்துகின்றனர். இம்முறை களமிறங்கும் சில புதுமுகங்கள்:

*ரிச்சர்டு லெவி(மும்பை இந்தியன்ஸ்) :

தென் ஆப்ரிக்க வீரரான ரிச்சர்டு லெவி, நியூசிலாந்து அணிக்கு எதிரான சமீபத்திய "டுவென்டி-20' போட்டியில் 45 பந்துகளில் அதிவேக சதம் அடித்து சாதனை படைத்தார். ஐ.பி.எல்., தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களமிறங்குகிறார். துவக்க வீரரான சச்சினுடன் இணைந்து கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

*ஜேம்ஸ் பட்டின்சன்(கோல்கட்டா):

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய பேட்ஸ்மேன்களை திணறடித்த பட்டின்சன், முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 11 விக்கெட் கைப்பற்றினார். கோல்கட்டா அணிக்காக களமிறங்கும் இவர், "வேகத்தில்' அசத்தலாம்.

*ஜார்ஜ் பெய்லி(சென்னை கிங்ஸ்):

ஆஸ்திரேலிய அணியின் "டுவென்டி-20' கேப்டனாக நியமிக்கப்பட்ட இவர், முதல் போட்டியிலேயே இந்திய அணியை வீழ்த்திக் காட்டினார். இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். துவக்க வீரராக களமிறங்கி அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

*கேதர் தேவ்தர்(டெக்கான் சார்ஜர்ஸ்):

பரோடாவை சேர்ந்த கேதர் தேவ்தார், உள்ளூர் "டுவென்டி-20' தொடரான முஸ்தாக் அலி டிராபியில், டில்லி அணிக்கு எதிரான அரையிறுதியில் 40 பந்துகளில் 96 ரன்கள் விளாசினார். தற்போது டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக கைகொடுப்பார் என நம்பப்படுகிறது.

*மைக்கெல் கிளார்க்(புனே வாரியர்ஸ்):

ஐ.பி.எல்., தொடரில் விளையாட மறுத்துவந்த ஆஸ்திரேலியா அணி கேப்டன் கிளார்க், இம்முறை புனே வாரியர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதால் இம்மாத இறுதி வரை ஐ.பி.எல்., போட்டிகளில் பங்கேற்க மாட்டார். இதற்கு பின் தான் இவரது அதிரடியை காண முடியும்.

*பிராட் ஹாக்(ராஜஸ்தான் ராயல்ஸ்):

"சுழல் மன்னன்' வார்ன் இல்லாத ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பிராட் ஹாக்கின் வருகையால் உற்சாகம் அடைந்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலிய அணிக்காக இரண்டு "டுவென்டி-20' போட்டிகளில் பங்கேற்று அசத்தினார். இவர், ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சில் பலம் சேர்க்க உள்ளார்.

*ஆண்ட்ரே ரசல்(டில்லி டேர்டெவில்ஸ்):

வெஸ்ட் இண்டீஸ் "ஆல்-ரவுண்டர்' ரசலின் வருகை டில்லி அணிக்கு கூடுதல் வலிமையை சேர்த்துள்ளது. ஐ.பி.எல்., தொடரில் முத்திரை பதித்து வரும் மற்ற வெஸ்ட் இண்டீஸ் வீரர்களான கெய்ல், போலார்டு போல ரசலும் கலக்குவார் என எதிர்பார்க்கலாம்.

0 comments:

Post a Comment