ஐபிஎல் போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் 'த்ரில்' வெற்றி

ஐபிஎல் போட்டித் தொடரின் 13-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், வெட்டோரி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.

சென்னை அணி இதுவரை தான் ஆடிய 3 ஆட்டங்களில் 1 வெற்றியும், 2 தோல்வியும் பெற்றுள்ளது. பெங்களூர் அணி இதுவரை தான் ஆடிய இரண்டு ஆட்டங்களில் 1 வெற்றியும், 1 தோல்வியும் பெற்றுள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இரு அணிகளும் களமிறங்கின.

டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதனையடுத்து அந்த அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் கெய்லும் மயங்க் அகர்வாலும் களமிறங்கினர்.

தொடக்கம் முதலே அதிரடி காட்டிய மயங்க் அகர்வால் 26 பந்துகளில் 45 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவரையடுத்து கெய்லுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார்.

அகர்வால் இருந்தவரை அமைதி காத்த கெய்ல், கோலி வந்தபிறகு அதிரடிக்கு மாறினார். கோலியும் அதிரடி காட்டினார்.

சென்னை அணியினர் வீசிய பந்துகளை வாணவேடிக்கை காட்டிய கெய்ல் 35 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உள்பட 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இவரையடுத்து வந்த டிவில்லியர்ஸ் 4 ரன்களிலும், சௌரப் திவாரி 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மறுமுனையில் நிலைத்து நின்ற கோலி அரைசதம் அடித்து அசத்தினார். இவர் 57 ரன்கள் எடுத்திருந்த போது பொலிஞ்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்துள்ளது.

கடைசி ஓவரில் பொலிஞ்சர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதுமட்டுமின்றி கடைசி ஓவரில் ரன் அவுட் முறையிலும் ஒரு விக்கெட் விழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஐபிஎல் சீஸன் 5 தொடரில் இதுவரை 12 ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. இது 13-வது ஆட்டம் ஆகும். இந்த 13 ஆட்டங்களில் முதல் முறையாக 200 ரன்களைக் கடந்துள்ள அணி என்ற பெருமையை பெங்களூர் அணி பெற்றுள்ளது.

206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு சென்னை அணி தனடது பேட்டிங்கை துவக்கியுள்ளது.

முரளி விஜயும் டு பிளிசிஸ்ஸும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

முரளி விஜய் 11 ரன்கள் எடுத்திருந்த போது முரளிதரன் பந்து வீச்சில் அவரிடமே பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரெய்னா 14 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இவரையடுத்து டு பிளிசிஸ் உடன் டோனி ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடிய பிளிசிஸ் அரை சதம் கடந்து அசத்தினார். இவர் 71 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். தோனி 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இவர்களையடுத்து பிராவோவும் அல்பி மோர்கெலும் ஜோடி சேர்ந்தனர். 19 -வது ஓவரை எதிர் கொண்ட மோர்கெல் 6 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகள் உள்பட 28 ரன்கள் குவித்தார். இதனால் சென்னை அணி 19 ஓவர்கள் முடிவில் 191 ரன்கள் எடுத்தது. இந்த ஓவரை விராத் கோலி வீசினார்.

கடைசி 6 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. இந்த ஓவரை வினய் குமார் வீசினார். 19.2 வது பந்தில் மோர்கெல் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார். இவர் கணக்கில் 28 ரன்கள் அடங்கும்.

19.3 வது பந்து நோபாலாக அமைய, அந்த பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் பிராவோ. அடுத்த பந்தை சிக்ஸருக்கு விரட்டினார். 19.4-வது பந்தில் ரன் ஏதும் கிடைக்கவில்லை. 19.5- வது பந்தில் ஒரு ரன் எடுத்தார் பிராவோ.

கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், அந்த பந்தை ரவீந்திர ஜடேஜா எதிர் கொண்டார். அந்த பந்தில் பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

இதனால் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் குவித்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றியைப் பெற்றது.

இந்த சீஸனில் 200 ரன்களை தாண்டிய இரண்டாவது அணி என்ற பெருமையும், 205 ரன்களை சேஸ் செய்த முதல் அணி என்ற பெருமையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த ஆட்டத்தின் மூலம் கிடைத்தது.

இன்றைய ஆட்டத்தில் பெங்களூர் அணி 11 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகள் விளாசியது. சென்னை அணி 11 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகள் விளாசியது. இந்த 15-வது பவுண்டரிதான் சென்னை அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்தது என்றால் அது மிகையில்லை.

1 comments: