காயம் தந்த சோகம்

ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில், முன்னணி வீரர்கள் காயமடைந்திருப்பதால், அவர்கள் சார்ந்திருக்கும் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.


கிரேம் ஸ்மித்(ராஜஸ்தான் ராயல்ஸ்):

தென் ஆப்ரிக்க டெஸ்ட் அணி கேப்டன் ஸ்மித், 31. இவர், முதல் மூன்று ஐ.பி.எல்., தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். கடந்த 2008ல் 11 போட்டியில் விளையாடிய இவர், ராஜஸ்தான் அணி கோப்பை வெல்ல காரணமாக விளங்கினார். சொந்த மண்ணில் 2009ல் நடந்த தொடரில் 12 போட்டியில் பங்கேற்றார்.

இந்தியாவில் 2010ல் நடந்த ஐ.பி.எல்., தொடரில், டில்லி அணிக்கு எதிராக "பீல்டிங்' செய்த போது, இவரது வலது கை நடுவிரலில் காயம் ஏற்பட்டது. இதனால், இரண்டு போட்டியோடு வெளியேறினார்.

கடந்த முறை புனே வாரியர்ஸ் அணி, இவரை ஏலத்தில் எடுத்தது. கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிக்கு எதிராக "பீல்டிங்' செய்த போது, இவரது வலது முழங்காலில் காயம் ஏற்பட, நான்கு போட்டியில் மட்டுமே விளையாட முடிந்தது.இம்முறை ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில் முழுமையாக பங்கேற்க வேண்டும் என நினைத்த ஸ்மித்துக்கு, காயத்தின் சோகம் துரத்தியது.

இரண்டு மாதங்களுக்கு முன், இடது கணுக்காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை மேற்கொண்ட இவருக்கு, "ஆப்பரேஷன்' தேவை என டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் இவர், ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில் முழுமையாக பங்கேற்கும் வாய்ப்பை இழந்து, ஏமாற்றம் அடைந்தார்.


யுவராஜ் சிங்:

இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் யுவராஜ் சிங், 30. முதல் மூன்று ஐ.பி.எல்., தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக விளையாடினார். கடந்த முறை இவரை புனே வாரியர்ஸ் அணி ஒப்பந்தம் செய்து, கேப்டனாக நியமித்தது. இதுவரை 57 ஐ.பி.எல்., போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 5 அரைசதம் உட்பட 1237 ரன்கள் எடுத்துள்ளார்.

சமீபத்தில் இவர், நுரையீரலில் ஏற்பட்ட "கேன்சர்' கட்டிக்கு அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொண்டார். காயத்தில் இருந்து மீண்டு வரும் இவர், ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில் விளையாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். இது, புனே அணிக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.


இஷாந்த் சர்மா:

இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா, 23. முதல் மூன்று தொடர்களில் கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய இவரை, கடந்த ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணி ஒப்பந்தம் செய்தது. இதுவரை 43 போட்டியில் பங்கேற்று 36 விக்கெடக் கைப்பற்றியுள்ளார்.

சமீபத்தில் இங்கிலாந்தில் கணுக்கால் காயத்திற்கு "ஆப்பரேஷன்' செய்து கொண்ட இவருக்கு ஆறு மாத காலம் ஓய்வு தேவைப்படுவதால், ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் டெக்கான் அணி சிறந்த வேகப்பந்துவீச்சாளரை இழந்து தவிக்கிறது.


மற்ற வீரர்கள்:

இதேபோல, ஆஸ்திரேலிய "ஆல்-ரவுண்டர்' மற்றும் புனே வாரியர்ஸ் அணி வீரர் ஜேம்ஸ் ஹோப்ஸ், காயம் காரணமாக விலகினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரர் அபினவ் முகுந்த், பயிற்சியின் போது ஏற்பட்ட காயத்தினால், பத்து நாட்களுக்கு போட்டியில் விளையாடமாட்டார்.

நியூசிலாந்து கேப்டன் மற்றும் டில்லி டேர்டெவில்ஸ் அணி வீரர் ராஸ் டெய்லர், காயம் காரணமாக பாதியில் பங்கேற்பார் எனத் தெரிகிறது. இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது காயமடைந்தால், ஐ.பி.எல்., தொடரில் இருந்து விலகினார். இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment