சச்சினுக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி அளிக்கப்பட்டதை பலரும் வரவேற்றுள்ளனர். இதற்கு அவர் சம்மதம் தெரிவித்தது, தனக்கு பெரும் அதிர்ச்சி அளிப்பதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் சாசன சிறப்பு பிரிவின்படி ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் பெயரை மத்திய அரசு பரிந்துரை செய்தது. இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க, பார்லிமென்ட்டில் சச்சின் நுழைவது உறுதியாகி உள்ளது. இது குறித்து பிரபலங்கள் சிலரது கருத்து:
சஞ்சய் மஞ்ச்ரேக்கர்(முன்னாள் கிரிக்கெட் வீரர்):
சச்சினுக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி என்ற செய்தியை கேட்டதும் அதிர்ச்சி அடைந்தேன். இதற்கு அவர் சம்மதம் தெரிவித்தது பேரதிர்ச்சியாக இருந்தது. ஓய்வுக்கு பின் பயிற்சியாளர் உட்பட கிரிக்கெட் தொடர்பான பணிகளில் ஈடுபடுவார் என நினைத்தேன். எம்.பி., ஆவார் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. தற்போது அதிகளவில் போட்டிகளில் பங்கேற்காததால், பார்லிமென்ட் கூட்டங்களில் கலந்து கொள்ள இவருக்கு போதிய நேரம் <உண்டு.
ஹர்ஷா போக்ளே(கிரிக்கெட் வர்ணனையாளர்):
சச்சினை வைத்து பலரும் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். இவரை கவுரவப்படுத்துவதற்காக தான் ராஜ்யசபா பதவி என்றால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், பார்லிமென்ட்டில் சமூக பிரச்னைகள், நாட்டின் எதிர்காலம் பற்றி பேச வேண்டும் என எதிர்பார்த்தால், அதற்கான அனுபவம் அவரிடம் இல்லை. அவருடன் நெருக்கமாக பழகியதன் அடிப்படையில், அவருக்கு தெரிந்தது எல்லாம் கிரிக்கெட் மட்டுமே. தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வருவதால், பார்லிமென்ட் செல்ல நேரம் கிடைக்குமா என தெரியவில்லை.
ஆகாஷ் சோப்ரா(முன்னாள் கிரிக்கெட் வீரர்):
விளையாட்டில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ராஜ்யசபா பதவியை சச்சின் ஏற்றுக் கொண்டுள்ளார். வசதியற்ற விளையாட்டு வீரர்களின் நலனுக்காக குரல் எழுப்ப வேண்டும். விளையாட்டு அமைப்புகளில் அரசியல்வாதிகளின் தலையீட்டை போக்க போராட வேண்டும்.
சேவக்(கிரிக்கெட் வீரர்):
வாழ்த்துகள் சச்சின். ஐ.பி.எல்., போட்டியில் முதல் முறையாக ராஜ்யசபா உறுப்பினருக்கு எதிராக விளையாடுகிறேன்.
பாய்ச்சங் பூட்டியா(முன்னாள் கால்பந்து வீரர்):
அரசியலில் சேர்ந்து மாற்றத்தை கொண்டு வர முடியுமானால், சச்சின் முடிவை வரவேற்கிறேன். இது முழுக்க முழுக்க அவரது தனிப்பட்ட முடிவு. சச்சினை போன்றவர்கள் எம்.பி.,யாக தேர்வு செய்யப்படுவது விளையாட்டுக்கு நல்லது. இவரை போன்ற நல்ல மனிதர்கள் பார்லிமென்ட்டில் நுழைய வேண்டும்.
0 comments:
Post a Comment