தோனி-சேவக் நேருக்கு நேர்

ஐ.பி.எல்., தொடரின் இன்றைய லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன. ஜெயவர்தனா, பீட்டர்சன் வருகையால் பலமடைந்துள்ள டில்லி அணியை, சமாளிக்க சென்னை கிங்ஸ் அணி தயாராக உள்ளது.

சென்னை, கோல்கட்டா, மும்பை உட்பட 9 அணிகள் பங்கேற்கும் ஐந்தாவது ஐ.பி.எல்., தொடர் தற்போது இந்தியாவில் நடக்கிறது. இன்று நடக்கும் 11வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டில்லி டேர்டெவில்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


திடீர் எழுச்சி:

சென்னை அணி முதல் போட்டியில் மும்பையிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. பின் டெக்கான் அணிக்கு எதிராக திடீர் எழுச்சி பெற்றது. டு பிளசிஸ் அதிரடிக்கு திரும்பியுள்ளார். முரளி விஜய் விரைவில் "பார்முக்கு' திரும்ப வேண்டும்.


பவுலிங் ஆறுதல்:

வேகப்பந்து வீச்சில் வழக்கம் போல போலிஞ்சர் ஆறுதல் தருகிறார். ஆல்பி மார்கல் பிராவோ தவிர, சுழலில் அஷ்வின் ரன்களை மட்டும் கட்டுப்படுத்துகிறார். ரவிந்திர ஜடேஜா டெக்கான் அணிக்கு எதிராக 16 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றி, நல்ல "பார்மில்' உள்ளார். இவர்களுடன் ஜகாதியும் களமிறங்குவதில் மாற்றம் இருக்காது என நம்பலாம்.


பேட்டிங் பலம்:

கோல்கட்டாவுக்கு எதிரான அசத்தல் வெற்றி பெற்ற டில்லி அணி, பெங்களூருவுக்கு எதிராக திடீரென வீழ்ந்தது. பேட்டிங்கில் ஏற்கனவே சேவக், பின்ச் அதிரடி துவக்கம் தருகின்றனர். "மிடில் ஆர்டரில்' நமன் ஓஜா, வேணுகோபால் ராவ் மேக்ஸ்வெல் உள்ளனர். இந்நிலையில், பீட்டர்சன், ஜெயவர்தனா அணிக்கு திரும்புவது கூடுதல் உற்சாகமாக உள்ளது. இவர்கள் இருவருமே சிறப்பான "பார்மில்' உள்ளனர்.


மார்கல் அபாரம்:

தென் ஆப்ரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மார்னே மார்கல், பிரேஸ்வெல் சிறப்பாக செயல்படுகின்றனர். இர்பான் பதான் "ஆல் ரவுண்டர்' பணியில் நம்பிக்கை தருகிறார். சுழலில் நதீம் தவிர, யாரும் இல்லாதது பலவீனமே.

கடந்த போட்டியில் பாதியில் வெளியேறிய <உமேஷ் யாதவ், இன்று வழக்கமான பவுலிங்கில் ஈடுபடுவார் என்று நம்பப்படுகிறது. இந்திய அணியில் அவ்வப்போது உரசிக் கொள்ளும் தோனி, சேவக் இம்முறை நேருக்கு நேர் மோதுவதால், அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


இரு அணிகள் இதுவரை...

ஐ.பி.எல்., வரலாற்றில் சென்னை, டில்லி அணிகள் இதுவரை 7 போட்டிகளில் மோதின. இதில் 4ல் சென்னை கிங்ஸ் வெற்றிபெற்றது. 3 போட்டியில் டில்லி அணி வென்றுள்ளது.

0 comments:

Post a Comment