இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் அரசியலில் குதித்தார். அவரை ராஜ்ய சபா எம்.பி.,யாக்க மத்திய அரசு செய்த பரிந்துரையை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் ஏற்றார். சச்சினுடன் பாலிவுட் நடிகை ரேகா மற்றும் தொழிலதிபர் அனு அகா ஆகியோரும் ராஜ்யசபா எம்.பி.,யாகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். நேற்றுடன் 39 வயதை கடந்துள்ள சச்சினுக்கு இந்த பிறந்த நாள் நிச்சயம் மறக்க முடியாததாகவே இருக்கும். சர்வதேச போட்டிகளில் நூறு சதங்களை கடந்துள்ள சச்சினுக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்பிய காங்., தலைவர் சோனியாவை இன்று காலை அவரது வீட்டில் தனது மனைவி அஞ்சலியுடன் சந்தித்தார் சச்சின்.
அது முதலே பற்றிக்கொண்டது பரபரப்பு. சச்சின் ராஜ்யசபா எம்.பி.,யாக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதையடுத்தே இந்த சந்திப்பு நிகழ்வதாக மீடியாக்கள் கொளுத்திப்போட்டன.
தொடர்ந்து அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு சச்சின் அரசியல் பிரவேத்தை வரவேற்கத்துவங்கின. முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சச்சின் ராஜ்ய சபா எம்.பி.,யாவதற்கு வரவேற்பு தெரிவித்தன.
தொடர்ந்து சச்சின், பாலிவுட் நடிகை ரேகா மற்றும் தொழிலதிபர் அனு அகா ஆகியோரை ராஜ்யசபா எம்.பி.,யாக பரிந்துரை செய்து மத்திய அரசு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 80ன் கீழ் பரிந்துரை செய்யப்பட்ட இம்மூவரையும் ராஜ்யசபா எம்.பி.,யாக்க ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் இன்றிரவு ஒப்புதல் அளித்தார். இதையடுத்து சச்சின் உள்ளிட்ட மூவரும் விரைவில் ராஜ்யசபா எம்.பி.,யாக பதவியேற்பர் என தெரிகிறது.
அன்னா ஹசாரே வரவேற்பு:
சச்சின் ராஜ்ய சபா எம்.பி.,யாவதை காந்தியவாதி அன்னா ஹசாரே வரவேற்றுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த ஹசாரே, சச்சின் ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் ஊழலுக்கு எதிராக போராடுவார் என தான் நம்புவதாக தெரிவித்தார்.
0 comments:
Post a Comment