மும்பையை கரை சேர்ப்பாரா சச்சின்

ஐ.பி,.எல்., தொடரில் இன்று நடக்கும் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

ஐந்தாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர், இந்தியாவில் தற்போது நடக்கிறது. இதில் இன்று நடக்கும் 28வது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


பேட்டிங் ஏமாற்றம்:

மும்பை அணி, இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளில் 3 வெற்றி, 2 தோல்வி அடைந்துள்ளது. அணியின் பேட்டிங் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. டில்லிக்கு எதிரான கடந்த போட்டியில், 92 ரன்னுக்கு சுருண்டது மும்பை அணி. கடந்த ஐந்து தொடர்களில் மும்பை அணியின் மோசமான ஸ்கோர் வரிசையில், இது இரண்டாவதாக அமைந்தது.

துவக்க வீரர் லீவி, ரோகித் சர்மா, போலார்டு, அம்பாதி ராயுடு ஆகியோர் நிலையற்ற பேட்டிங்கை வெளிப்படுத்துகின்றனர். விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், ஒட்டுமொத்தமாக ஏமாற்றம் தருகிறார். இதனால், பேட்டிங்கில் நல்ல துவக்கம் தர, சச்சினால் மட்டுமே முடியும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அணிக்கு எப்போதெல்லாம் விக்கெட் தேவையோ, அப்போதெல்லாம் அதை கைப்பற்றி தரும் மலிங்கா, இடுப்பு வலியால் அவதிப்படுகிறார். இவருக்குப் பதில் இடம் பெற்ற மக்காய், டில்லிக்கு எதிராக பெரியளவில் சாதிக்கவில்லை.

இதுவரை 10 விக்கெட் வீழ்த்திய முனாப் படேல் மட்டும் ஆறுதலாக பவுலிங் செய்கிறார். சுழற்சியில் ஹர்பஜன் சிங், இதுவரை 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தியது அணிக்கு வருத்தமான செய்தி.


பஞ்சாப் பரிதாபம்:

பஞ்சாப் அணி இதுவரை 6 போட்டிகளில் பங்கேற்று 2ல் மட்டுமே வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. அணியின் பேட்டிங் சுமார். பெங்களூரு அணிக்கு எதிராக எடுத்த 163 ரன்கள் தான் இந்த அணியால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர்.

இந்நிலையில், கில்கிறிஸ்ட் இன்றும் இல்லாதது இழப்பு தான். கடந்த சீசனில் 463 ரன்கள் குவித்த வல்தாட்டி, இப்போது ஆறு போட்டியில் 34 ரன்கள் தான் எடுத்துள்ளார். டேவிட் ஹசி, ஷான் மார்ஷ் மட்டும் ஆறுதல் தருகின்றனர்.


மகமூது ஆறுதல்:

விசா சிக்கலில் இருந்து மீண்டு, அணிக்கு திரும்பிய அசார் மகமூது, அசத்தலான ஆட்டத்தை தருகிறார். இன்றும் இது தொடரும் என நம்பலாம். இவருடன் மாஸ்கரனாஸ், பிரவீண் குமார், மன்பிரீத் சிங், பியுஸ் சாவ்லா ஆகியோர் இருந்தாலும், இன்று துவக்கத்தில் விக்கெட் வீழ்த்துவதை பொறுத்து தான் பஞ்சாப் அணியின் வெற்றி அடங்கியுள்ளது.


பலன் தருமா:

மும்பை அணி ஐந்து நாள் ஓய்வுக்குப் பின் இன்று களம் காணுகிறது. பஞ்சாப் அணி கெய்ல் புயலில் இருந்து முழுமையாக மீண்டு விட்டார்களா என்று தெரியவில்லை. இந்நிலையில் சொந்தமண் பலத்தில் மும்பை எழுச்சி பெறலாம்.

0 comments:

Post a Comment