ஐ.பி.எல்., தொடரில் இன்று நடக்கவுள்ள லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் - டில்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிநடையை தக்கவைத்துக் கொள்ள மும்பை அணி காத்திருக்கிறது.
மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று நடக்கவுள்ள ஐந்தாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடருக்கான 19வது லீக் போட்டியில், ஹர்பஜன் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, சேவக்கின் டில்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
பவுலிங் பலம்:
மும்பை அணியின் மிகப்பெரிய பலம் வேகப்பந்துவீச்சு. லசித் மலிங்கா, முனாப் படேல் வேகத்தில் எதிரணியின் பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டை எளிதில் பறிகொடுக்கின்றனர். இவர்களுக்கு "ஆல்-ரவுண்டர்' போலார்டு, பிராங்க்ளின் ஆகியோர் ஒத்துழைப்பு அளிப்பது கூடுதல் பலம்.
அனுபவ சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், இதுவரை பெரிய அளவில் சாதிக்கவில்லை. இன்று இவர் எழுச்சி பெற்றால் நல்லது. மற்றொரு சுழற்பந்துவீச்சாளர் பிரக்யான் ஓஜா நம்பிக்கை அளிக்கிறார். இவரது சுழல் ஜாலம் இன்றும் தொடந்தால், விக்கெட் வேட்டை நடத்தலாம்.
சேவக் எதிர்பார்ப்பு:
டில்லி அணியின் பேட்டிங்கில் சேவக் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி உள்ளது. கடந்த மூன்று போட்டியில் பெரிய அளவில் ரன் சேர்க்காத இவர், இன்று அதிரடி துவக்கம் அளிக்கும் பட்சத்தில் வலுவான ஸ்கோரை பெறலாம். மகிளா ஜெயவர்தனா, கெவின் பீட்டர்சன் வருகையால் டில்லி அணியின் பேட்டிங் வரிசை பலமடைந்துள்ளது.
சென்னை அணிக்கு எதிராக அசத்திய இவர்கள், இன்றும் கைகொடுக்கலாம். காயத்தில் இருந்து மீண்ட நியூசிலாந்து கேப்டன் ராஸ் டெய்லர், அணியில் இணைந்திருப்பது டில்லி அணியின் பேட்டிங்கில் கூடுதல் வலு சேர்க்கிறது. "மிடில்-ஆர்டரில்' வான் டெர் மெர்வி, வேணுகோபால் ராவ், அபிஷேக் நாயர், இர்பான் பதான் ஆகியோர் கைகொடுக்க வேண்டும்.
மார்கல் நம்பிக்கை:
டில்லி அணியின் வேகப்பந்துவீச்சில் மார்னே மார்கல் நம்பிக்கை அளிக்கிறார். இவருடன் இணைந்து இர்பான் பதான், உமேஷ் யாதவ் துல்லியமாக பந்துவீசும் பட்சத்தில், மும்பை அணிக்கு சிக்கல்தான். சுழலில், சொல்லிக்கொள்ளும்படி முன்னணி வீரர்கள் இல்லாதது பின்னடைவான விஷயம். வான் டெர் மெர்வி, நதீம் ஆகியோர் சுழலில் கைகொடுக்கும் பட்சத்தில், சுலப வெற்றி பெறலாம்.
சொந்த மண்ணில் சாதிக்க மும்பை அணியும், மூன்றாவது வெற்றியை பெற டில்லி அணியும் காத்திருப்பதால், சுவாரஸ்யமான ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.
இதுவரை...
ஐ.பி.எல்., அரங்கில் மும்பை இந்தியன்ஸ் - டில்லி டேர்டெவில்ஸ் அணிகள் ஒன்பதாவது முறையாக மோத உள்ளன. முன்னதாக மோதிய எட்டு போட்டிகளில் மும்பை 5, டில்லி 3 போட்டியில் வெற்றி பெற்றன.
0 comments:
Post a Comment