இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவதே லட்சியம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனான 30 வயதான யுவராஜ்சிங் நுரையீரல் பகுதியில் ஏற்பட்ட புற்றுநோய்க்கு அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் 3 கட்ட கீமோதெரபி சிகிச்சை பெற்று கடந்த திங்கட்கிழமை நாடு திரும்பினார்.

வீடு திரும்பிய பின்னர் யுவராஜ்சிங் முதல்முறையாக தனது சொந்த ஊரான குர்கானில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மீண்டும் எனக்கு வாழ்க்கை அளித்த கடவுளுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டு இருக்கிறேன். நோயின் பாதிப்பில் இருந்து விடுபட்டு நாடு திரும்பியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

நான் விரைவில் களம் திரும்ப வேண்டும் என்று எனது ரசிகர்கள் அனைவரும் விரும்புகிறார்கள். பழைய நிலைக்கு திரும்ப எனது உடல் சில காலங்கள் எடுத்து கொள்ளும் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்பதை உறுதியாக நம்புகிறேன்.

உடல் நலனில் நான் கவனம் செலுத்த வேண்டியது இருக்கிறது. 2 மாதங்களுக்கு பிறகு முடிந்த வரை சீக்கிரம் களம் திரும்ப முயற்சிப்பேன். கடினமான நேரத்தை நான் கடந்து வந்து இருக்கிறேன். எனது தாயார் என்னுடன் இருப்பது எனக்கு மிகப்பெரிய பலமாகும். அவர் இல்லாமல் இந்த கஷ்ட காலத்தை கடப்பதை என்னால் நினைத்து கூட பார்க்க முடியாது. சிகிச்சை பெற்ற இந்த 2 மாத காலக்கட்டத்தில் அவர் தனது சோகத்தை மறைத்து கொண்டதுடன், கண்ணீர் கூட சிந்தவில்லை.

அதிகாலையில் நான் இருமினாலோ அல்லது தும்மினாலோ உடனே எழுந்து வந்து என்னை பார்ப்பார். சில சமயம் நான் சிறுகுழந்தை போல் அழுவேன். அப்போது அவர் என்னை தேற்றுவார். அவர் என்னை விட மனவலிமை மிக்கவராக இருந்தார். இதே போல் சைக்கிள் பந்தய வீரர் அமெரிக்காவின் லான்ஸ் ஆம்ஸ்ட்ராங்கும் உத்வேகமும், நம்பிக்கையும் அளித்தார். 5 அல்லது 6 வருடங்களுக்கு முன்பு ஆம்ஸ்ட்ராங் புத்தகத்தை நான் படித்தேன்.

சில காரணத்தால் அதனை படிப்பதை பாதியில் விட்டுவிட்டேன். தற்போது முழுமையாக படித்து முடித்தேன். ஆம்ஸ்ட்ராங்கும் என்னை போன்று தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர். ஆனால் அவருக்கு அது கடைசி கட்டத்தில் தான் தெரியவந்தது. எனக்கு தொடக்க கட்டத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. அவருடன் என்னை ஒப்பிட விரும்பவில்லை. வாழ்க்கையில் அவர் உண்மையிலேயே கதாநாயகன்.

அவரது சாதனைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை ஆகும். எனக்கு புற்றுநோய் இருந்ததை என்னால் நம்பமுடியவில்லை. அதனை பரிசோதனை மூலம் உறுதி செய்ய 6 மாத காலம் பிடித்தது. மூச்சு விடுவதில் பிரச்சினை ஏற்பட்டதுடன், கடுமையான இருமலும் இருந்தது. சளியில் ரத்தம் வந்தது. இதனை நான் யாரிடமும் சொல்லவும் இல்லை. காண்பித்ததும் கிடையாது. எனக்கு தானே நான் நன்றாக இருப்பதாக சொல்லி தேற்றி கொண்டேன்.

ஆனால் எனக்குள் சிக்கலான பிரச்சினை இருப்பது தெரிந்தது. அதில் இருந்து விடுபட வேண்டும் என்று நினைத்தேன். மனரீதியாக நான் எப்பொழுதும் உறுதி படைத்தவன். தற்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். புற்றுநோய் எனது உடலை விட்டு நீங்கி விட்டது. இருப்பினும் அந்த தாக்குதலின் வடு இன்னும் உள்ளது. வருங்காலங்களில், புற்றுநோயில் இருந்து விடுபட்டு சாதிக்க நினைப்பவர்களுக்கு நான் உதவி செய்வேன்.

எப்போதெல்லாமல் அணியில் இடம் பெறாமல் வெளியில் இருந்து கிரிக்கெட் பார்ப்பனோ அப்போது அது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கும். எனவே கிரிக்கெட்டை டி.வி.யில் பார்ப்பதை தவிர்த்து விடுவேன். ஆனால் வீட்டில் இருந்து கொண்டு எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருந்தது ரொம்ப கடினமாக இருந்தது.

வீட்டில் இருந்த போது, நான் நடக்க முயற்சித்ததுடன், வீடியோ கேம்ஸ் விளையாடினேன். சினிமா பார்த்தும் பொழுதை கழித்தேன். எனது தாயார் எனக்கு சமைத்து கொடுத்தார். என்னால் அதிகம் எதுவும் செய்ய முடியவில்லை. வீட்டை விட்டு வெளியில் வருவதற்கு கடினமாக இருந்தது. வருங்காலத்தில் நான் என்ன செய்வேன் என்பது எனக்கு தெரியாது.

இந்திய அணியின் சின்னத்தை மறுபடியும் அணிந்து விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பதையே எனது வாழ்நாள் லட்சியமாக கருதுகிறேன். நான் சிகிச்சை பெற்ற போது, ஆஸ்திரேலிய தொடரில் விளையாடிக் கொண்டிருந்த சச்சின் தெண்டுல்கருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தேன். லண்டனுக்கு வந்து அவர் என்னை சந்தித்தது மகிழ்ச்சி அளித்தது.

எனக்கு எப்பொழுதும் உத்வேகம் அளிக்கக்கூடியவர் தெண்டுல்கர். அவருடன் மறக்க முடியாத நட்பை வளர்த்துக் கொண்டுள்ளேன். சர்வதேச போட்டியில் தெண்டுல்கர் 100-வது சதத்தை அடிக்கும் போது நான் அணியில் இருக்க வேண்டும் என்று விரும்பினேன்.

துரதிர்ஷ்டவசமாக என்னால் அணியில் இருக்க முடியாமல் போய்விட்டது. உலக கோப்பை கிரிக்கெட்டில் கால்இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 57 ரன்கள் எடுத்த இன்னிங்ஸ் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் மறக்க முடியாத தருணமாகும்.

நான் எப்போதும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றி ரன்னை அடிக்க விரும்புவேன். அதனால் தான் இந்த இன்னிங்சை சிறப்பு வாய்ந்ததாக கருதுகிறேன். கிரிக்கெட் பிரபலம் மூலம் எனக்கு புகழ், பணம் உள்பட எல்லாம் கிடைத்து விட்டது. பணம் வாழ்க்கைக்கு முக்கியம் தான். இருப்பினும் பணத்தை விட மகிழ்ச்சியும், உடல் ஆரோக்கியமும் மிகவும் முக்கியமானதாகும்.

இவ்வாறு யுவராஜ்சிங் கூறினார்.

0 comments:

Post a Comment