கிழித்து தைத்த டெய்லர் - 33 ஆண்டுக்குப் பின் மோசமான தோல்வி



ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், பவுலிங், பேட்டிங்கில் ஒட்டு மொத்தமாக சொதப்பிய இந்திய அணி, 87 ரன்களில் வீழ்ந்து, நியூசிலாந்து மண்ணில் 33 ஆண்டுக்குப் பின் மோசமான தோல்வியை பதிவு செய்தது. 

ராஸ் டெய்லர் மீண்டும் சதம் அடித்து அசத்த, ஒருநாள் கோப்பையை தட்டிச் சென்றது நியூசிலாந்து அணி.

நியூசிலாந்து சென்ற இந்திய அணி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டியின் முடிவில், இந்திய அணி, 0–3 என தொடரை இழந்தது. கடைசி ஒருநாள் போட்டி, வெலிங்டனில் நேற்று நடந்தது.
இத்தொடரில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் தோனி, ‘பீல்டிங் தேர்வு செய்தார்.


மீண்டும் தவான்:

ஆறுதல் வெற்றியை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு, ‘ஆல் ரவுண்டர்’ ஸ்டுவர்ட் பின்னி நீக்கப்பட்டு, ஷிகர் தவான் மீண்டும் சேர்க்கப்பட்டார். நியூசிலாந்து அணியில், டிம் சவுத்திக்கு பதில் மாட் ஹென்றி அறிமுக வீரராக வாய்ப்பு பெற்றார். பென்னட் இடத்தில் மெக்லீனகன் களமிறங்கினார்.

நியூசிலாந்து அணிக்கு ஜெசி ரைடர் (17), கப்டில் (16) ஜோடி சுமாரான துவக்கம் அளித்தது. இதனால் 13 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 41 ரன்கள் எடுத்த நியூசிலாந்து அணி தடுமாறியது. பின் இணைந்த வில்லியம்சன், ராஸ் டெய்லர் ஜோடி, வழக்கம் போல இந்திய வீரர்களின் பவுலிங்கை எளிதாக சமாளித்தது. 


டெய்லர் சதம்:

வில்லியம்சன், இத்தொடரில் தொடர்ந்து 5வது அரை சதத்தை எட்டினார். மூன்றாவது விக்கெட்டுக்கு 152 ரன்கள் சேர்த்த போது வில்லியம்சன், 88 ரன்களில் அவுட்டானார். 

கேப்டன் பிரண்டன் மெக்கலம் (23) நிலைக்கவில்லை. தொடர்ந்து ரன்வேட்டை நடத்திய டெய்லர், ஷமி வேகத்தில் பவுண்டரி அடித்து, ஒருநாள் அரங்கில் 10வது சதத்தை பூர்த்தி செய்தார். இத்தொடரில் தொடர்ந்து அடிக்கும் இரண்டாவது சதம் இது. இவர் 102 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

வந்த வேகத்தில் அதிரடியாக ரன்கள் சேர்த்த நீஷம், போட்டியின் கடைசி ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்து மிரட்ட, நியூசிலாந்து அணி, 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 303 ரன்கள் குவித்தது. நீஷம் (34), ரான்கி (11) அவுட்டாகாமல் இருந்தனர். 

இந்திய அணி சார்பில் ஆரோன் 2, புவனேஷ்வர், ஷமி, கோஹ்லி தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.


ரோகித் சொதப்பல்:

கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி, ஆமைவேக துவக்கம் கொடுத்தது. ரோகித் சர்மா (4), ஷிகர் தவான் (9) அடுத்தடுத்து நடையை கட்டினர். பின் வந்த ரகானே (2) மறுபடியும் ஏமாற்றினார். இதனால் இந்திய அணி, 15 ஓவரில் 34 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

அடுத்து வந்த அம்பதி ராயுடுவும், நிதானத்தை வெளிப்படுத்த, இந்திய அணி 20 ஓவரில் 58 ரன்கள் மட்டுமே எடுக்க, ரசிகர்கள் வெறுப்படைந்தனர். ராயுடு (20) அவுட்டானார். 


கோஹ்லி நம்பிக்கை:

பின் இணைந்த கோஹ்லி, தோனி ஜோடி சற்று நம்பிக்கை தந்தது. நீஷம் பந்தில் அடுத்தடுத்து சிக்சர், பவுண்டரி அடித்த கோஹ்லி, ஒருநாள் அரங்கில் 30வது அரைசதம் கடந்தார்.

ரன்வேகத்தை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கிய கோஹ்லி, 82 ரன்னுக்கு ‘பெவிலியன்’ திரும்பினார். கடைசி 10 ஓவர்களில் வெற்றிக்கு 138 ரன்கள் தேவை என்ற நிலையில், அஷ்வின் (7), ரவிந்திர ஜடேஜாவும் (5) விரைவில் வெளியேற, இந்திய அணியின் தோல்வி உறுதியானது. மனம் தளராமல் போராடிய தோனி, 47 ரன்களில் அவுட்டானார்.

புவனேஷ்வர் (20), ஆரோன் ‘டக்’ அவுட்டாக, இந்திய அணி 49.4 ஓவரில், 216 ரன்களுக்கு ‘ஆல் அவுட்டாகி’ 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. நியூசிலாந்து வீரர் மாட் ஹென்றி 4 விக்கெட் வீழ்த்தினார். ஒருநாள் தொடரை 4–0 என வென்ற நியூசிலாந்து அணி, கோப்பை தட்டிச் சென்றது.


மோசமான தோல்வி:

 1975–76, 1980–81ல் நியூசிலாந்து சென்ற இந்திய அணி, ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. 33 ஆண்டுக்குப் பின், மீண்டும் மோசமான தோல்வியடைந்துள்ளது.


தோனி ‘8000’

நேற்று தோனி 1 ரன் எடுத்தபோது ஒருநாள் அரங்கில், 8000 ரன்கள் எடுத்த வீரரானார். இதன்மூலம் குறைந்த இன்னிங்சில் (214) இம்மைல்கல்லை எட்டிய நான்காவது வீரர் என்ற பெருமை பெற்றார் தோனி.

இந்தியாவின் கங்குலி (200), சச்சின் (210), வெஸ்ட் இண்டீசின் லாரா (211) ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர். இவர்கள் மூவருமே பேட்டிங்கில் முதல் மூன்று இடத்தில் களமிறங்கியவர்கள். பின்வரிசையில் களமிறங்கும் (5–7 இடம்) தோனி, அதிவேகமாக 8000 ரன்களை எட்டியுள்ளார்.


கைகொடுக்காத ராசி

* நியூசிலாந்து தொடரின் ஐந்து போட்டியிலும் கேப்டன் தோனி ‘டாஸ்’ வென்றார். இப்படி, இரு அணிகள் மோதும் ஒருநாள் தொடரின் அனைத்து போட்டியிலும் தோனி ‘டாஸ்’ வெல்வது இரண்டாவது முறை.

* இதற்கு முன் 2009ல் வெஸ்ட் இண்டீஸ் சென்றபோது, ஒருநாள் தொடரின் 4 போட்டியிலும் ‘டாஸ்’ வென்றார். அப்போது தொடரை 2–1 என கைப்பற்றிய இந்திய அணி, தற்போது 0–4 என இழந்தது.


தோல்விக்கு என்ன காரணம்

இந்திய அணி கேப்டன் தோனி கூறுகையில், ‘‘தொடர் முழுவதும் நியூசிலாந்து வீரர்கள் சிறப்பாக விளையாடினர். எங்களைப் பொறுத்தவரை சூழ்நிலைக்கு ஏற்ப விரைவில் மாற்றிக் கொண்டு, திறமை வெளிப்படுத்தாதது தான் தோல்விக்கு முக்கிய காரணம்,’’ என்றார்.

0 comments:

Post a Comment