கெவின் பீட்டர்சனின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததுவெஸ்ட் இண்டீஸ் தொடர் மற்றும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இங்கிலாந்து அணியில் அவரது பெயர் இடம் பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தென் ஆப்பிரிக்கா தந்தைக்கும், இங்கிலாந்து தாய்க்கும் தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவர் கெவின் பீட்டர்சன். 

அங்கு முதல் தர போட்டியில் விளையாடிய நிலையில் அந்த நாட்டு அணியில் கடைப்பிடிக்கப்படும் இன ரீதியான இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்து வெளியேறி 2001–ம் ஆண்டில் இங்கிலாந்தில் குடியேறினார். 

இதன் பின்னர் 2004–ம் ஆண்டில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் இங்கிலாந்து அணிக்குள் அடியெடுத்து வைத்த கெவின் பீட்டர்சன் அருமையான பேட்டிங் மூலம் அனைவரையும் கவர்ந்தாலும், அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வாடிக்கையாகும். 

2008–ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற கெவின் பீட்டர்சன், பயிற்சியாளர் பீட்டர் மூர்சுடனான மோதல் காரணமாக 5 மாதத்தில் கேப்டன் பதவியை இழந்தார். 

இதுமட்டுமின்றி 2012–ம் ஆண்டில் சக வீரர்கள் மற்றும் பயிற்சியாளரை விமர்சித்து சமூக வலைதளம் மூலம் தென் ஆப்பிரிக்க அணியினருக்கு செய்தி அனுப்பி சர்ச்சையில் சிக்கி அணியில் இருந்து நீக்கப்பட்டு பின்னர் சேர்க்கப்பட்டார். 

2010–ம் ஆண்டில் 20 ஓவர் உலக கோப்பையை இங்கிலாந்து அணி வெல்ல முக்கிய காரணமாக விளங்கிய கெவின் பீட்டர்சன் 2005, 2009, 2010–11, 2013–ம் ஆண்டுகளில் ஆஷஸ் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் இடம் பெற்று இருந்தார். 

சமீபத்தில் 0–5 என்ற கணக்கில் ஆஷஸ் தொடரை இழந்த இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம் பிடித்து இருந்த கெவின் பீட்டர்சன் மோசமான ஆட்டம் காரணமாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கான அணியில் சேர்க்கப்படவில்லை. இருப்பினும் ‘அடுத்த ஆஷஸ் தொடரை இங்கிலாந்து அணி வெல்ல வேண்டும் என்பதே எனது இலக்கு. 

எனவே தற்போது ஓய்வு பெறும் திட்டம் இல்லை’ என்று கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் ஆஷஸ் தோல்வியை தொடர்ந்து இங்கிலாந்து அணியை வலுப்படுத்த அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதன் ஒரு கட்டமாக பயிற்சியாளர் ஆண்டி பிளவர் நீக்கப்பட்டார். மேலும் கெவின் பீட்டர்சனையும் அணியில் இருந்து முழுமையாக கழற்றி விடுவது என்ற துணிச்சலான நடவடிக்கையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மேற்கொண்டுள்ளது. 

இந்த மாதத்தில் வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் ஒருநாள் போட்டித் தொடர் மற்றும் வங்காளதேசத்தில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் கெவின் பீட்டர்சனின் பெயர் பரிசீலிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது, பீட்டர்சனின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையாக அமைந்துள்ளது. ‘அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பையை கருத்தில் கொண்டு புதிய வலுவான அணியை உருவாக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை அணி நிர்வாகத்தினரால் ஒருமனதாக எடுக்கப்பட்டது. 

இருப்பினும் பீட்டர்சனை நீக்க எடுத்த முடிவு கடினமானதாகும்’ என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து பீட்டர்சன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கடந்த 9 ஆண்டுகளாக இங்கிலாந்து அணியில் இடம் பிடித்து விளையாடியது பெருமையாக கருதுகிறேன். எனது நம்பமுடியாத கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வருவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. 

இங்கிலாந்து அணியின் அற்புதமான வெற்றிகளில் பங்கேற்றதையும், சிறந்த வீரர்களுடன் இணைந்து ஆடியதையும் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். நான் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவேன். இருப்பினும் இங்கிலாந்து அணிக்காக விளையாட முடியாமல் போவது வருத்தம் அளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.   

33 வயதான கெவின் பீட்டர்சன் 104 டெஸ்டில் விளையாடி 23 சதங்களுடன் 8181 ரன்னும், 136 ஒருநாள் போட்டியில் ஆடி 9 சதங்களுடன் 4440 ரன்னும், இருபது ஓவர் போட்டியில் 37 ஆட்டத்தில் விளையாடி 1176 ரன்னும் எடுத்துள்ளார்.

0 comments:

Post a Comment