சச்சின் தொடரில் ரூ. 180 கோடி



ச்சினுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் தொடர் மூலம் பி.சி.சி.ஐ.,க்கு சுமார் ரூ. 180 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

இந்திய ‘மாஸ்டர் பேட்ஸ்மேன்’ சச்சின், சர்வதேச கிரிக்கெட்டில் சதத்தில் சதம் உட்பட பல சாதனைக்கு சொந்தக்காரர். இவர், தனது 200வது டெஸ்ட் போட்டியை சொந்த மண்ணில் விளையாடி, ஓய்வு பெற வேண்டும் என்பதற்காக வெஸ்ட் இண்டீசுடன் ஒரு தொடரை(2 டெஸ்ட்+3 ஒருநாள் போட்டி) இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) அவசரம் அவசரமாக கடந்த ஆண்டு ஏற்பாடு செய்தது.

இத்தொடர் மூலம் பி.சி.சி.ஐ., சுமார் ரூ. 180.60 கோடியை மட்டும் அள்ளிய விவரம் தற்போது தெரிய வந்துள்ளது.  ஒளிபரப்பு உரிமம் (ரூ. 32.2 கோடி, ஒருபோட்டிக்கு), தொடர் ஸ்பான்சர் உரிமம் (ரூ. 2 கோடி), ஜெர்சி உரிமம் (ரூ.1.92 கோடி) உள்ளிட்டவை அடங்கும்.

* இதன்படி பார்க்கும் போது, மொத்தம் 5 போட்டிகள் (2 டெஸ்ட், 3 ஒருநாள்) கொண்ட தொடரில் பி.சி.சி.ஐ.,யின் வருமானம் ‘ஸ்பான்சர்’ ஒப்பந்தம் மூலம் மட்டும் (ரூ. 32.2 கோடி* 5= ரூ. 161 கோடி) + (ரூ. 2 கோடி x5 =10 கோடி) + (ரூ. 1.92 கோடி x 5= 9.6 கோடி) மொத்தமாக ரூ. 180.60 கோடி. 

இதில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டுக்கு வழங்கப்பட்ட ரூ. 1.50 கோடியை தவிர்த்து, ரூ.179.10 கோடி  பி.சி.சி.ஐ.,க்கு வருமானம் கிடைத்துள்ளது. இதுகுறித்து பி.சி.சி.ஐ., அதிகாரி ஒருவர் கூறியது:

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள், டெஸ்ட் போட்டிகள் அனைத்தும் இரு நாட்டு கிரிக்கெட் போர்டுகளின் பரஸ்பர ஒப்பந்த அடிப்படையில் தான் நடத்தப்பட்டது. அப்போதைய ஐ.சி.சி.,யின் அட்டவணைப்படி, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 1 ‘டுவென்டி–20’, 7 ஒருநாள் போட்டிகள் மட்டுமே இடம் பெற்றிருந்தது.

ஆனால் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரில் செய்யப்பட்ட மாற்றம், சச்சினின் கடைசி டெஸ்ட் போன்ற காரணங்களுக்காக தான் வெஸ்ட் இண்டீஸ் தொடர் நடத்தப்பட்டது. ஐ.சி.சி.,யால் ஒப்பந்தம் செய்யப்பட்டு இத்தொடர் நடத்தப்படவில்லை.

சமீபத்தில் நடந்த உறுப்பினர்கள் கூட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு, வீரர்களின் செலவு ரூ. 1.50 கோடி , விசா உள்ளிட்ட செலவுத் தொகையை திருப்பித்தரும்படி கேட்ட விஷயத்தை, தலைவர்  சீனிவாசன் தெரிவித்தார். 

இதை கொடுக்க வேண்டிய கட்டாயம் பி.சி.சி.ஐ.,க்கு இல்லை. இருப்பினும் இத்தொகையை வழங்க பி.சி.சி.ஐ., உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தனர். 

இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:

Post a Comment