இந்தியாவின் 2வது இடத்துக்கு ஆபத்து



ஐ.சி.சி., டெஸ்ட் அணிகளுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் ‘நம்பர்–2’ இடத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக இன்று துவங்கும் இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் வௌியிடப்படும், சிறந்த டெஸ்ட் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில், தென் ஆப்ரிக்க அணி 133 புள்ளிகளுடன் ‘நம்பர்–1’ இடத்தில் உள்ளது. இந்தியா (117 புள்ளி), ஆஸ்திரேலியா (111), இங்கிலாந்து (107), பாகிஸ்தான் (100) அணிகள் ‘டாப்–5’ வரிசையில் உள்ளன.

இப்பட்டியலில், தென் ஆப்ரிக்காவின் முதலிடத்துக்கு பாதிப்பு இல்லை. தென் ஆப்ரிக்க அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இழந்த போதிலும், 124 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடரும். இதன்மூலம் முதலிடத்துக்கான ஐ.சி.சி., டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருதை தக்கவைத்துக் கொள்ளும்.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இரண்டாவது இடத்துக்கு பலத்த போட்டி நிலவுகிறது. இந்திய அணி, 2வது இடத்தில் நீடிக்க, முதலில் நியூசிலாந்துக்கு எதிராக வெலிங்டனில் இன்று துவங்கும் 2வது டெஸ்டில் வெற்றி பெற வேண்டும். அதேவேளையில், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா இழக்க வேண்டும்.

ஆஸ்திரேலியா, இரண்டாவது இடத்துக்கு முன்னேற, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்ற வேண்டும். இதன்மூலம் 117 புள்ளிகளுடன் 2வது இடம் பிடிக்கலாம். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1–1 என சமன் செய்தால் கூட, இந்திய அணி (114) மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படும்.

0 comments:

Post a Comment