சலுகைகளை அனுபவிக்கும் தோனிஇந்திய கிரிக்கெட் போர்டிடம் (பி.சி.சி.ஐ.,) இருந்து, அதிகாரம் மற்றும் சலுகைகளை அனுபவித்து வரும் ஒரே கேப்டன் தோனி தான்,’’ என, பிஷன் சிங் பேடி தெரிவித்தார்.        
          
இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் தோனி. 2007ல் ‘டுவென்டி–20’, 2011ல் 50 ஓவர் போட்டிகளில் உலக கோப்பை வென்று தந்தார். 2013ல் சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றினார். இதனால், கிரிக்கெட் உலகம் தோனியை புகழ்கிறது.

இதனிடையே, சமீப காலமாக அன்னிய மண்ணில் தோனி தலைமையிலான இந்திய அணி மோசமான தோல்விகளை சந்திக்கிறது. இதனால், இவரை கடுமையாக விமர்சித்துள்ளார், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி.         
         
இதுகுறித்து அவர் கூறியது:              
   
என்னைப் பொறுத்தவரையில், நான் தோனியின் பெரிய ரசிகன் அல்ல. ஆனால், ஒன்று மட்டும் உறுதி. பி.சி.சி.ஐ.,யின் அதிகாரம், சலுகைகளை அதிகமாக அனுபவித்து வரும் ஒரே கேப்டன் தோனி தான்.    
              
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டைகர் பட்டோடி, கவாஸ்கர் கூட, இப்படி ஒரு சலுகை மற்றும் சுதந்திரத்தை, பி.சி.சி.ஐ.,யிடம் இருந்து பெற்றிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.        
          
இவரை சகவீரர்கள் கூட எளிதில் அணுக முடியாது. கடந்த 2012ல் லட்சுமண் ஓய்வு பெற்றார். இதை கேப்டன் தோனியிடம் தெரிவிக்க முயன்றார். ஆனால், தோனி எங்கிருக்கிறார் என்றே லட்சுமணால் கண்டறிய முடியவில்லை.                  
எங்கள் காலத்தில், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நான்கு நாட்களில் வெற்றி பெற்றோம். இதற்கு பி.சி.சி.ஐ.,யில் இருந்து நாள் ஒன்றுக்கு ரூ.50 வீதம் ரூ.௨௦௦ மட்டுமே பரிசு கொடுத்தனர். இப்போது அப்படியல்ல.                  
ஒரு நல்ல கிரிக்கெட் வீரர் என்றால், பணம் அவரைத் தேடிவரும். இப்போது பணத்தை தேடி அலைவதால், கிரிக்கெட் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது.                  
பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசனுக்கும், சென்னை அணியின் சில வீரர்களுக்கும் தொடர்புகள் உள்ளன. உதாரணமாக புஜாராவையும், ரெய்னாவையும் ஒப்பிட்டு பார்த்தால் தெரியும். ரெய்னாவை விட புஜாரா நன்றாகத்தான் விளையாடுகிறார்.       
           
ஆனால், பி.சி.சி.ஐ., வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் ரெய்னாவுக்கு ‘ஏ’ பிரிவு (ரூ. 1 கோடி), புஜாராவுக்கு ‘பி’ பிரிவு (ரூ. 50 லட்சம்). இதற்கு ரெய்னாவுக்கும் சீனிவாசனுக்கும் உள்ள தொடர்பு தான் காரணம்.                  
இவ்வாறு பிஷன் சிங் பேடி கூறினார்.

0 comments:

Post a Comment