திராணி இல்லாத கேப்டனா தோனி



உள்ளூரில் ‘புலியாக’ திகழும் தோனி, சமீப காலமாக வெளிநாடுகளில் சொதப்புகிறார். இவர், தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று, குறைந்தபட்சம் டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கடந்த 2007ல் ‘டுவென்டி–20’ உலக கோப்பை, 2011 ல் 50 ஓவர் உலக கோப்பை, 2013ல் சாம்பியன்ஸ் டிராபி உட்பட இந்திய அணிக்காக 37 கோப்பைகள் வென்று தந்தவர் கேப்டன் தோனி. 

ஆனாலும் சமீப காலமாக  அன்னிய மண்ணில் ஏமாற்றுகிறார். கடந்த மூன்று ஆண்டுகளில், இவரது தலைமையில் 14 டெஸ்டில் 10ல் இந்திய அணி தோற்றது. அன்னிய மண்ணில் அதிக டெஸ்டில் தோற்ற கேப்டன்கள் வரிசையில் முதலிடத்தில் (11) உள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் அசார், பட்டோடி, கங்குலி (தலா 10) உள்ளனர்.

கடந்த ஜன., 2012ல் தோனி கூறுகையில்,‘‘ 2013 இறுதியில் ஏதாவது ஒரு போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன்,’’ என, தெரிவித்தார்.

இப்போது 2014, பிப்., ஆகிவிட்டது. இருப்பினும், விலகுவதாக தெரியவில்லை. டெஸ்ட் போட்டிகளில் எதிரணியின் ரன்குவிப்பை கட்டுப்படுத்த, அதிரடி மற்றும் ஆக்ரோஷமான முடிவுகள் எடுக்க வேண்டிய தோனி, தொடர்ந்து சொதப்புகிறார்.

வெலிங்டனில் நியூசிலாந்து அணி நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் கண்டது. ஆனால், ஜாகிர் கான், முகமது ஷமி, இஷாந்த் சர்மாவுடன், சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜாவுடன் களமிறங்கினார் தோனி. பயிற்சி போட்டியில் அசத்திய ஈஷ்வர் பாண்டேக்கு வாய்ப்பு வழங்கவில்லை.

ஆடுகளம் வேகத்துக்கு சாதகமான நிலையில், திடீரென தோனி பவுலிங் செய்தார். அடுத்த ஓவரில் ரோகித் சர்மா, கோஹ்லியை பவுலிங் செய்ய பணித்து, தற்காப்பு பாணியில் செயல்பட்டார். இது நியூசிலாந்து வீரர்களுக்கு வசதியாக போய்விட்டது.

இதைப்பார்த்த சாதாரண பள்ளி அளவில் விளையாடும் வீரர்கள் கூட, இவர் என்ன திட்டத்துடன் செயல்படுகிறார் என்று தெரியாமல் குழம்பினர்.

தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்பதால் கூட, தோனிக்கு களைப்பு ஏற்பட்டு திராணியில்லாமல் போயிருக்கலாம். இதனால், குறைந்தபட்சம் டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி விராத் கோஹ்லிக்கு வழிவிடலாம்.

இது குறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மார்டின் குரோவ் கூறுகையில்,‘‘அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை தக்க வைக்க வேண்டுமானால், தோனிக்கு சிறிது காலம் ஓய்வு தேவைப்படுகிறது. எனவே, டெஸ்ட் கேப்டன் பொறுப்பை கோஹ்லி வசம் ஒப்படைக்கலாம்,’’என்றார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டிராவிட் கூறுகையில்,‘‘இக்கட்டான நேரங்களில் தோனி தற்காப்பு பாணியை கையாள்கிறார். அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் மீது நம்பிக்கை இல்லாமல் உள்ளார். தொடர்ந்து பழைய பந்தை பயன்படுத்தி ரன்களை கட்டுப்படுத்த முயல்கிறார். 

இதற்கு உதாரணமாக டர்பன் டெஸ்டை குறிப்பிடலாம். இதில், 146 ஓவர்கள் முடிந்தும் புதிய பந்தை எடுக்கவில்லை. இன்னும் ஒரு ஆண்டுகளுக்கு டெஸ்ட் அணியின் கேப்டனாக நீடிக்கலாம். அன்னிய மண்ணில் டெஸ்டில் வெல்ல, கொஞ்சம் ‘ரிஸ்க்’ எடுப்பது அவசியம் என்பதையும் உணர்ந்து செயல்பட வேண்டும்,’’என்றார்.

0 comments:

Post a Comment