இந்தியாவை காவு வாங்கிய தவறான தீர்ப்புஆக்லாந்து டெஸ்டில் அம்பயர்களின் தவறான தீர்ப்பு, இந்திய அணிக்கு பாதகமாக அமைந்தது. முக்கியமான கட்டத்தில் ரகானே, கேப்டன் தோனிக்கு தவறாக ‘அவுட்’ கொடுக்கப்பட்டதால் வெற்றி பறிபோனது. 

துணிச்சலாக போராடிய ஷிகர் தவான் சதம் வீணானது. 40 ரன்களில் வென்ற நியூசிலாந்து அணி, தொடரில் 1–0 என முன்னிலை பெற்றது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், ஆக்லாந்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 503, இந்தியா 202 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் நியூசிலாந்து அணி 105 ரன்களுக்கு சுருண்டது. 

இதையடுத்து இந்திய அணிக்கு 407 ரன்கள் என்ற கடின இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி, ஒரு விக்கெட்டுக்கு 87 ரன்கள் எடுத்திருந்தது. 


கோஹ்லி அரைசதம்:

நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. இந்திய அணிக்கு புஜாரா (23) ஏமாற்றினார். பின் விராத் கோஹ்லி, ஷிகர் தவான் சேர்ந்து பொறுப்பாக ஆடினர். 

இவர்கள் 3வது விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்து நம்பிக்கை தந்தனர். சோதி ஓவரில் 3 பவுண்டரி விளாசிய கோஹ்லி, டெஸ்ட் அரங்கில் தனது 9வது அரைசதத்தை பதிவு செய்தார். இவர் 67 ரன்கள் எடுத்த போது வாக்னர் பந்தில் அவுட்டானர்.

எதிர்முனையில் தன்பங்கிற்கு சோதி பந்தில் ஒரு சிக்சர், 2 பவுண்டரிகள் அடித்த ஷிகர் தவான் (115), தனது 2வது சதத்தை பூர்த்தி செய்து, அவுட்டானார். தொடர்ந்து வந்த ரகானே (18) அம்பயரின் தவறான தீர்ப்பால் வெளியேற, தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 270 ரன்கள் எடுத்திருந்தது.


ரோகித் ஏமாற்றம்:

சவுத்தி பந்தில் ரோகித் சர்மா (19) நடையை கட்டினார். தொடர்ந்து வந்த ரவிந்திர ஜடேஜாவின் துணையுடன் கேப்டன் தோனி துணிச்சலாக போராடினார். இவர்கள், ஒருநாள் போட்டி போல் விரைவாக ரன்கள் சேர்க்க, இந்திய அணி இலக்கை நோக்கி சீராக முன்னேறியது.

வெற்றி பெற 83 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பவுல்ட் பந்தில் தேவையில்லாத ‘ஷாட்’ அடித்த ரவிந்திர ஜடேஜா (26) அவுட்டானார். ஜாகிர் கான் (17) ஓரளவு கைகொடுத்தார். தோனிக்கு (39) எதிராக அம்பயர் தீர்ப்பு அமைய, இந்திய அணியின் வெற்றிக் கனவு தகர்ந்தது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 366 ரன்களுக்கு  ‘ஆல் அவுட்டாகி’ தோல்வி அடைந்தது. 

ஆட்டநாயகன் விருதை நியூசிலாந்து கேப்டன் பிரண்டன் மெக்கலம் தட்டிச்சென்றார். இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் வரும் 14ல் வெலிங்டனில் துவங்குகிறது.


2வது வீரர்

அன்னிய மண்ணில் 4வது இன்னிங்சில் சதம் அடித்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமை பெற்றார் ஷிகர் தவான். முன்னதாக 1979ல் இங்கிலாந்துக்கு எதிராக ஓவலில் நடந்த டெஸ்டில் கவாஸ்கர் 221 ரன்கள் அடித்தார்.

* இப்போட்டியில் 115 ரன்கள் விளாசிய தவான், 4வது இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் 9வது இடம் பிடித்தார். 

0 comments:

Post a Comment