
ஜூனியர் உலக கோப்பை தொடரில் இருந்து, ‘நடப்பு சாம்பியன்’ இந்திய அணி நடையை கட்டியது. நேற்று நடந்த பரபரப்பான காலிறுதியில் கடைசி ஓவரில் இங்கிலாந்திடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது. அரையிறுதியில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
ஐ.சி.சி., சார்பில், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) நடக்கிறது. துபாயில் நேற்று நடந்த காலிறுதியில், ‘நடப்பு சாம்பியன்’ இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் விஜய் ஜோல், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.
ஹூடா அபாரம்: இந்திய அணிக்கு அன்குஷ் பைன்ஸ் (3), அகில் ஹெர்வாத்கர் (2) ஜோடி மோசமான துவக்கம் கொடுத்தது. அடுத்து வந்த சஞ்சு சாம்சன் ‘டக்-அவுட்’ ஆனார். ரிக்கி புய் (7) ஏமாற்றினார். இந்திய அணி 24 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
பின் இணைந்த கேப்டன் விஜய் ஜோல், தீபக் ஹூடா ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. இங்கிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்த இவர்கள், விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டனர். அபாரமாக ஆடிய ஹூடா அரைசதம் அடித்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்த போது, ஜோல் (48) அரைசத வாய்ப்பை இழந்து வௌியேறினார். பொறுப்பாக ஆடிய ஹூடா (68) ‘ரன்-அவுட்’ ஆனார்.
சர்பராஸ் நம்பிக்கை: அடுத்து வந்த அமிர் கானி (7), குல்தீப் யாதவ் (16) நிலைக்கவில்லை. அசத்தலாக ஆடிய சர்பராஸ் கான், அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஆட்டத்தின் கடைசி பந்தில் பவுண்டரி அடித்த சர்பராஸ் கான், அரைசதத்தை பதிவு செய்தார். இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 221 ரன்கள் எடுத்தது. சர்பராஸ் கான் (52), சமா மிலிந்த் (7) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் மாத்யூ பிஷர் 3 விக்கெட் வீழ்த்தினார்.
டக்கெட் அரைசதம்:
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு ஹாரி பின்ச் (10) ஏமாற்றினார். ரியான் ஹிகின்ஸ் (1) நிலைக்கவில்லை. ஜோனாதன் டாட்டர்சால் (23), எட் பர்னார்டு (24) பெரிய அளவில் சோபிக்கவில்லை. இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்த பென் டக்கெட் அரைசதம் அடித்தார். இவர், 61 ரன்கள் எடுத்து குல்தீப் யாதவ் பந்தில் அவுட்டானார். கேப்டன் வில் ரோட்ஸ் (10) ஏமாற்றினார். பொறுப்பாக ஆடிய ஜோ கிளார்க் (42) நம்பிக்கை தந்தார்.
இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 4 ரன்கள் தேவைப்பட்டன. மிலிந்த் வீசிய 50வது ஓவரின் முதல் பந்தை, ராப் சாயர் பவுண்டரிக்கு விரட்டினார்.
இங்கிலாந்து அணி 49.1 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 222 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராப் ஜோன்ஸ் (28), ராப் சாயர் (10) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருது இங்கிலாந்தின் பென் டக்கெட்டுக்கு வழங்கப்பட்டது.
இத்தோல்வியின் மூலம், சீனியர்கள் வழியில் ஜூனியர்களும் அன்னிய மண்ணில் சோபிக்க தவறினர். தவிர, ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்ளும் வாய்ப்பு பறிபோனது.
இந்திய அணி 5-8வது இடங்களுக்கான போட்டியில் இலங்கையுடன் (இடம்-துபாய், பிப்., 24) விளையாடுகிறது. இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது. வரும் பிப்., 24ம் தேதி துபாயில் நடக்கும் அரையிறுதியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
0 comments:
Post a Comment