பாரத ரத்னா பெற்றார் சச்சின்



நாட்டின் மிக உயர்ந்த ‘பாரத ரத்னா’ விருதை இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் பெற்றார்.  இதன் மூலம் இளம் வயதில் இவ்விருதை பெற்ற இந்தியர் என்ற பெருமை பெற்றார் சச்சின்.             

இந்திய அணியின் ‘மாஸ்டர் பேட்ஸ்மேன்’ சச்சின், 40. கடந்த 24 ஆண்டுகளாக கிரிக்கெட்டில் அசத்திய இவர், சர்வதேச போட்டிகளில் ‘சதத்தில்’ சதம் உட்பட பல்வேறு சாதனைகள் படைத்தார்.  

இவருக்கு ‘பாரத ரத்னா’ விருது தர வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இவருக்காக, விளையாட்டு வீரர்களும் இவ்விருதை பெறும் வகையில், சட்டத்தில் திருத்தங்கள் செய்ய மத்திய அரசு, 2011 டிசம்பர் மாதம் முன்வந்தது.                        
கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மும்பையில் தனது 200வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியுடன், ஓய்வு பெற்றார் (நவ., 16) சச்சின். அன்றைய தினம்  ‘பாரத ரத்னா’ விருது இவருக்கு வழங்கப்படும் என மத்திய அரசு  அறிவித்தது. 

டில்லியில் உள்ள  ஜனாதிபதி மாளிகையில் இன்று நடந்த வண்ணமயமான விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலையில் பிரனாப் முகர்ஜி,  இவ்விருதை சச்சினுக்கு வழங்கி கவுரவித்தார். சச்சினின் மனைவி அஞ்சலி, மகள் சாரா ஆகியோரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர். 


இதிலும் சாதனை:

இன்று ‘பாரத ரத்னா’ விருதை பெற்ற 40 வயதான சச்சின், இவ்விருதை குறைந்த வயதில் வென்றவர் என்ற பெருமை பெற்றார். தவிர, முதல் விளையாட்டு வீரர் என்ற சாதனையை படைத்தார்.

0 comments:

Post a Comment