முத்தான மூன்று கலவை கோஹ்லி



சச்சின், டிராவிட், சேவக் ஆகிய மூன்று வீரர்களின் கலவையாக இளம் விராத் கோஹ்லி உள்ளார்,’’ என, மார்டின் குரோவ் தெரிவித்தார்.

இந்திய அணியின் துணைக் கேப்டன் விராத் கோஹ்லி, 25. நியூசிலாந்து மண்ணில் களமிறங்கிய முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்து அசத்தினார். இதுவரை பங்கேற்ற 130 ஒருநாள் போட்டிகளில் 18 சதம், 30 அரைசதம் உட்பட மொத்தம் 5,445 ரன்கள் எடுத்துள்ளார்.

இவர் குறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மார்டின் குரோவ் கூறியது:

இந்தியாவின் அசத்தலான இளம் வீரர் கோஹ்லி. இவர் சச்சின், டிராவிட், சேவக் என, மூன்று பேரும் சேர்ந்த கலவையாக உள்ளார். டிராவிட்டிடம் இருந்து தீவிரமாக போராடும் குணம், சேவக்கிடம் இருக்கும் துணிச்சலை பெற்றுள்ள இவர், சச்சினைப் போல அசாதாரணமான வீரராக உள்ளார். 

மொத்தத்தில், இவர்களிடம் இருந்து ஒவ்வொன்றையும் கற்று, தனக்கென தனி பாணியை வகுத்துள்ளார். இவை அனைத்தும் சேர்ந்து கோஹ்லியை சிறப்பான வீரராக மட்டும் மாற்றவில்லை. 

கிரிக்கெட்டில் ஒரு சிறந்த மேதையாக உருவாக்கியுள்ளது. அதாவது மாணவனாக இருந்த இவர், ஆசிரியராக விரைவில் மாறிவிட்டார். எதிர்காலத்தில் ‘மாஸ்டர்’ ஆகிவிடுவார்.

கடந்த 2008ல் நடந்த பிரிமியர் தொடரில், பெங்களூரு அணிக்கு பயிற்சியாளராக இருந்த போதே கோஹ்லியை கவனித்தேன். கிரிக்கெட்டினை கற்றுக்கொள்ளும் ஆர்வம், எழுச்சி அதிகமாக இருந்தது.

அதிகமான குழப்பம் காரணமாக, யாரைப் போல, எப்படி விளையாடுவது என, கேட்பார். எதைப்பற்றியும் சிந்திக்காமல் நேராக அடித்து விளையாடினால் போதும் என, அவரை உற்சாகப்படுத்தினேன். இன்று இதுதான் இவருக்கு ‘பெஸ்ட் ஷாட்’ ஆகவுள்ளது. 

தவிர, துணிச்சலாகவும், அழகாகவும் அடித்து விளையாடுவது தான் இவரது ‘ஸ்டைல்’. தவிர, சச்சினிடம் இருந்தும் நிறைய கற்றுக் கொண்டுள்ளார். கோஹ்லியின் குணத்தை பார்க்கும் போது பெரும்பாலும் சச்சினைப் போலவுள்ளது.

அடுத்து வரும் ஆண்டுகளில், ஏறக்குறைய சச்சினைப் போலவே மாறிவிடுவார். அதேநேரம், களத்தில் வெளிப்படுத்தும் ஆக்ரோஷத்தை சற்று குறைத்துக் கொண்டால் நல்லது. சச்சின், டிராவிட் போன்றவர்கள் கோஹ்லிக்கு இதை கற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு மார்டின் குரோவ் கூறினார்.

0 comments:

Post a Comment