
இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு (ஐ.ஒ.ஏ.,)விதிக்கப்பட்டிருந்த தடையை, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஒ.சி.,) நீக்கியுள்ளது. இதனால், 14 மாதத்திற்கு பின், இந்தியா மீண்டும் ஒலிம்பிக் அரங்கிற்கு திரும்பியுள்ளது.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐ.ஒ.சி.,) புதிய விதிகளின்படி தேர்தல் நடத்த முன்வராத, இந்திய ஒலிம்பிக் சங்கம்(ஐ.ஒ.ஏ.,) , கடந்த 2012, டிச., 4ல் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 9ம் தேதி, புதிய விதியின் படி, ஐ.ஓ.ஏ., தேர்தல் நடந்தது.
ராமச்சந்திரன் தேர்வு:
இதில், இந்திய ஸ்குவாஷ் கூட்டமைப்பு தலைவராக உள்ள ராமச்சந்திரன், புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தவிர, புதிய நிர்வாகிகளும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
தங்களின் விதிப்படி, தேர்தல் நடத்தியதால், சர்வதேச ஒலிம்பிக் சங்கம், இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட தடையை இன்று நீக்கியது. இது, இந்திய ஒலிம்பிக் நட்சத்திரங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐ.ஒ.ஏ., செயலாளர் ராஜிவ் மேத்தா கூறுகையில்,‘‘ சர்வதேச ஒலிம்பிக் சங்கம், இந்தியாவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதாக தொலைபேசியில் தெரிவித்தது,’’ என்றார்.
மூவர்ணக்கொடி:
தடை நீக்கப்பட்டதால், தற்போது சோச்சியில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில் இந்திய வீரர்கள் மூவர்ணக் கொடியுடன் பங்கேற்கலாம்.
0 comments:
Post a Comment