எடுபடுமா 2 கேப்டன் பார்முலா?



இந்திய கிரிக்கெட் அணியை தோல்வியில் இருந்து மீட்க, இரண்டு கேப்டன்களை நியமிக்கலாம். டெஸ்டுக்கு விராத் கோஹ்லியும், ஒருநாள் போட்டிக்கு தோனியும் அணியை வழிநடத்தலாம்.

கடந்த 2007, உலக கோப்பை (50 ஓவர்) தொடரில், முதல் சுற்றில் இந்திய அணி வெளியேற, அடுத்து நடந்த ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில், சீனியர்களை புறக்கணித்துவிட்டு, தோனிக்கு கேப்டன் பொறுப்பு தரப்பட்டது.

இதில் கோப்பை வென்று சாதிக்க, அதே ஆண்டில் ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பும் இவரைத் தேடிவந்தது. தொடர்ந்து 2008ல் கும்ளேக்குப் பின் டெஸ்ட் அணிக்கும் கேப்டன் ஆனார்.

அடுத்த 8 மாதத்தில் இந்திய அணி தரவரிசைப் பட்டியலில் ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறியது. இதெல்லாம் இப்போது பழைய கதை ஆகிவிட்டது. கும்ளே, டிராவிட், கங்குலி, சச்சின், லட்சுமண் என, அடுத்தடுத்து ஓய்வுபெற, தோல்வி துரத்த துவங்கியது.

இருப்பினும், உள்ளூரில் வெளுத்து வாங்கிய தோனி (15ல் 11 வெற்றி, 2 தோல்வி, 2 ‘டிரா’), அன்னிய மண்ணில் சறுக்கினார். கடந்த இரண்டரை ஆண்டுகளில் அதாவது, 2011, ஜூன் மாதத்துக்குப் பின், பங்கேற்ற 15 டெஸ்டில் 1 வெற்றி, 10 தோல்வி, 4 ‘டிரா’ என, நிலைமை படுமோசமாக உள்ளது.

எதிரணிகளை மிரட்டும் திறமை படைத்த வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் இல்லை என்று சமாளித்தாலும், தொடர்ச்சியான தோல்விகளை ஏற்க முடியாது. ஏனெனில், கடந்த நவ., 2013ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் வென்ற பின், இன்னும் ஒரு போட்டியில் கூட இந்திய அணி வெற்றி பெறவில்லை.

இதனால், கேப்டன் பொறுப்பில் இருந்து தோனியை மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அதேநேரம், அடுத்த ஆண்டு (2015) உலக கோப்பை தொடர் நடக்கவுள்ள நிலையில், ஒருநாள் அணிக்கு கேப்டனை மாற்றுவது சிக்கலாகி விடும்.

இதனால், டெஸ்ட் அணிக்கு மட்டும், விராத் கோஹ்லியை கேப்டனாக்க வேண்டும். ஏனெனில், கடந்த தென் ஆப்ரிக்கா, சமீபத்திய நியூசிலாந்து தொடரில் 3 சதம் அடித்து, நிலையான ஆட்டத்தை வெளிப்டுத்தி வருகிறார். 

0 comments:

Post a Comment