மீண்டும் சூது கவ்வும் - தோனி, ரெய்னா, ஆர்.பி.சிங்



சூதாட்டம் குறித்து நீதிபதி முத்கல் குழு அளித்த அறிக்கையில், தோனி, ரெய்னாவைத் தொடர்ந்து ஆர்.பி.சிங் பெயரும் இடம் பெற்றது தெரிய வந்துள்ளது.

ஆறாவது பிரிமியர் தொடர் சூதாட்டத்தில், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் சிக்கினார். 

இதுகுறித்து விசாரித்த அரியானா ஐகோர்ட் தலைமை நீதிபதி முகுல் முத்கல் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு, கடந்த 10ம் தேதி அறிக்கை சமர்பித்தது.

இதில் இந்திய அணி கேப்டன் தோனி, ரெய்னா உட்பட 6 வீரர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ‘‘குருநாத், தோனி மற்றும் சிலர் இணைந்து, 2013, மே 12ம் தேதி நடந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ‘பிக்சிங்’ செய்தனர் என, புக்கிகள் தெரிவித்துள்ளதாக இடம் பெற்றுள்ளது. 


சம்பத் உறுதி:

இந்த செய்தியை உறுதி செய்து, போலீஸ் அதிகாரி சம்பத் குமார் கூறுகையில், ‘‘போலி பாஸ்போர்ட் தொடர்பான விசாரணையின் போது, கிரிக்கெட் சூதாட்டம் குறித்து செய்திகள் கிடைத்தன. இதுகுறித்து கிட்டி என்பவரை விசாரித்த போது, குருநாத், தோனி மற்றும் ரெய்னாவின் பெயர்களை தெரிவித்தார். இது உண்மை தான்,’’ என்றார்.

இதுகுறித்து மேலும் விசாரிக்க இருந்த நிலையில் தான், சம்பத் குமார் திருச்சி ரயில்வே பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

இதனிடையே, சுப்ரீம் கோர்ட்டில் அளித்த அறிக்கையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் பெயரும் உள்ளது. சூதாட்டம் குறித்து கைது செய்யப்பட்ட ஸ்ரீசாந்திடம் விசாரித்த போது, மூன்று வீரர்கள் பெயரை, டில்லி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆர்.பி.சிங்கிடம் விசாரணை நடந்தது.

என்ன காரணங்களுக்காகவோ, போதிய ஆதாரம் இல்லை என்று தெரிவித்து, மூவரது பெயரையும், விசாரணை வளையத்தில் இருந்து நீக்கி விட்டனர். இந்த விவரங்கள், நீதிபதி முகுல் முத்கல் குழு அறிக்கையில் இடம் பெற்றுள்ளதாம்.


இறுகும் பிடி:

தோனியின் நெருங்கிய நண்பர் ஆர்.பி.சிங். இவரது பெயர் அறிக்கையில் உள்ளது, தோனிக்கு கூடுதல் நெருக்கடி தான். 2011, இங்கிலாந்து தொடரில் ஜாகிர் கான் காயமடைய, திடீரென ஆர்.பி.சிங் இடம் பெற்றார்.

2008 முதல் டெஸ்டில் பங்கேற்காத இவரை, 3 ஆண்டுக்குப் பின் அணியில் சேர்த்த தோனியின் முடிவு, எல்லோருக்கும் வியப்பபைத் தந்தது. இதில் பெரியளவில் ‘பெட்டிங்’ நடந்திருக்கலாம் என, அப்போது செய்திகள் வெளியானது.

இதேபோல, கடந்த பிரிமியர் தொடரில் பெங்களூரு அணியில் விளையாடினார் ஆர்.பி.சிங். சென்ற ஆண்டு ஏப்., 13ல் நடந்த போட்டியில், சென்னை அணி வெற்றி பெறும் வகையில், கடைசி பந்தை, இவர் ‘நோ–பாலாக’ வீசியது சந்தேகத்தை கிளப்பியது. 

இதனிடையே, மார்ச் 3ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு மறுபடியும் விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது, தோனி, ரெய்னா, ஆர்.பி.சிங் உள்ளிட்ட 6 வீரர்களின் தொடர்பபை முழுமையாக விசாரிக்க கோர்ட் உத்தரவிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment