சாதிக்க உதவிய தோனியின் டிப்ஸ்

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சிறந்த கேப்டனாக சாதிக்க, தோனி வழங்கிய ஆலோசனைகள் உதவியது,'' என, இந்திய வீரர் விராத் கோஹ்லி தெரிவித்தார்.
சமீபத்தில் ஜிம்பாப்வே சென்ற விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, 5-0 என தொடரை வென்றது. இதன்மூலம் அன்னிய மண்ணில் முதன்முறையாக ஒருநாள் தொடரை 5-0 என முழுமையாக கைப்பற்றி சாதித்தது.

இதுகுறித்து விராத் கோஹ்லி கூறியது: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரின் போது முதுகுபகுதியில் காயமடைந்த தோனி மூன்று போட்டிகளில் விளையாடவில்லை. 

இதனையடுத்து அணியின் கேப்டன் பொறுப்பு என்னிடம் வந்தது. அப்போது, வெவ்வேறு சூழ்நிலைகள் எப்படி செயல்படுவது, நெருக்கடியான நேரத்தில் "கூலாக' எப்படி அணியை வழிநடத்துவது என தோனியிடம் ஆலோசனை கேட்டேன். தோனியின் ஆலோசனைகள், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அணியை சிறப்பாக வழிநடத்தி சாதிக்க உதவியது.

ஜிம்பாப்வே வெற்றி குறித்து தோனியிடம் பேச முயன்றேன். ஆனால், தற்போது இவர், "பிஸி'யாக இருப்பதால் தொடர்பு கொள்ள முடியவில்லை. பொதுவாக ஓய்வு நேரத்தில் இவரை தொடர்பு கொள்வது கடினம். விரைவில் தோனியை சந்தித்து, ஜிம்பாப்வே அனுபவம் குறித்து தெரிவிப்பேன்.

ஐ.சி.சி., ஒருநாள் போட்டி பவுலர்களுக்கான ரேங்கிங்கில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா "நம்பர்-1' இடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சமீபகாலமாக சிறப்பாக விளையாடி வருவதால், இவரால் முதலிடத்துக்கு முன்னேற முடிந்தது. 

19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளில் இவருடன் இணைந்து விளையாடி உள்ளேன். உலக கோப்பை (19 வயது) தொடருக்கு கேப்டனாக இருந்த போது எனது அணியில் ஜடேஜா இடம் பெற்றிருந்தார். தற்போது நாங்கள் இருவரும் சர்வதேச போட்டிகளில் இணைந்து விளையாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. இவரது சிறப்பான ஆட்டம் வரும் காலங்களிலும் தொடரும் என நம்புகிறேன்.

வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கான கிரிக்கெட் தொடரை வரவேற்கிறேன். இதன்மூலம் இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி, தேசிய அணியில் இடம் பிடிக்கலாம். 

கடந்த 2009ல் ஆஸ்திரேலியாவில் நடந்த இத்தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம், இந்திய அணியில் இடம் பிடிக்க முடிந்தது. சவால் நிறைந்த இத்தொடர் மூலம் திறமையான இளம் வீரர்களை கண்டறியலாம்.

இவ்வாறு விராத் கோஹ்லி கூறினார்.

0 comments:

Post a Comment