சவாலுக்கு தயாராகும் ஜாகிர்



மீண்டும் இந்திய அணியில் இடம் பெற முயற்சிக்கும் எனக்கு, உள்ளூர் போட்டிகளில் சோதனை காத்திருக்கிறது. இதை எதிர்கொள்ள தயாராகி வருகிறேன்,'' என, வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான் தெரிவித்தார்.

இந்திய அணியின் "சீனியர்' வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான், 34. கடந்த ஆக., மாதம் நடந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டிக்குப் பின் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான கோல்கட்டா (2012, டிச.,) போட்டிக்குப் பின், டெஸ்ட் அணியில் இருந்தும் வெளியேற்றப்பட்டார்.

தொடர்ந்து மும்பை அணிக்காக சில ரஞ்சி போட்டிகளில் பங்கேற்றார். அடுத்து கெண்டைக்கால் காயம் காரணமாக, நான்கு மாத காலம் போட்டிகளில் விளையாட முடியவில்லை. 

பிரிமியர் தொடரின் கடைசியில் மீண்டு வந்த இவர், கடந்த பிப்.,ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் மறுபடியும் காயம் அடைய, அடுத்தடுத்து அணியில் சேர்க்கப்படவில்லை. 

இப்போது, கடுமையான பயிற்சிக்குப் பின் மீண்டும் அணியில் இடம் பெற முயற்சித்து வருகிறார். 

இதுகுறித்து ஜாகிர் கான் கூறியது:

பொதுவாக ஒவ்வொருவரும் இந்திய அணிக்காக விளையாடுவதைத் தான் விரும்புவர். எனது உடற்தகுதி நன்றாக இருந்தால், நானும் அணியில் இடம் பெற முயற்சிக்கலாம். ஏற்கனவே, இந்த காரணத்துக்காகத் தான் நீக்கப்பட்டேன். மீண்டும் சரியான உடற்தகுதி பெறத்தான் இப்போது போராடிக் கொண்டுள்ளேன்.

இதற்காகத்தான் பிரான்சின் டிம் எக்செட்டரிடம் நானும், யுவராஜ் சிங்கும் சென்றோம். எங்களைப் பொறுத்தவரை இவர் சரியான நபர் தான். ஏனெனில், உலகின் பல விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் ஒவ்வொரு வீரருக்கும் என்ன தேவை என்பதை, எக்செட்டர் சரியாக தெரிந்து வைத்துள்ளார். 

இப்போது முதல்கட்ட பயிற்சி தான் முடிந்துள்ளது. வரும் செப்., துவக்கத்தில் தென் ஆப்ரிக்கா சென்று பவுலிங் பயிற்சியில் ஈடுபடவுள்ளேன். 

அடுத்து வரும் ரஞ்சி சீசன் போட்டிகள் எனக்கு மிகப்பெரிய சோதனை. இதில் சிறப்பாக செயல்பட்டு, இந்திய அணிக்கு திரும்ப விரும்புகிறேன். இந்திய அணியில் இப்போதுள்ள இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 

இதனால் அணிக்கு திரும்ப முடியுமா என்று பயப்படவில்லை. ஏனெனில், இதுபோன்ற போட்டிகள் இருந்தால் தான், மேலும் சிறப்பாக செயல்பட முடியும்.

இவ்வாறு ஜாகிர் கான் கூறினார்.

0 comments:

Post a Comment