மீண்டும் சேவக், காம்பிர்



உள்ளூர் போட்டிகளில் திறமையை நிரூபிக்கும் பட்சத்தில், சேவக், காம்பிர் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்கலாம்,'' என, முன்னாள் பி.சி.சி.ஐ., தேர்வுக்குழு தலைவர் கிரண் மோரே நம்பிக்கை தெரிவித்தார்.

இந்திய அணியின் துவக்க வீரர்களாக, டில்லியை சேர்ந்த சேவக், காம்பிர் ஜோடி அசத்தியது. மோசமான "பார்ம்' காரணமாக, சமீபத்திய போட்டிகளில் இவர்களுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. 

இவர்களுக்கு பதிலாக தேர்வு செய்யப்பட்ட ஷிகர் தவான், ரோகித் சர்மா, முரளி விஜய் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் சேவக், காம்பிர் ஜோடி, மீண்டும் அணியில் இடம் பிடிக்க முடியாமல் தவிக்கிறது. 

இதனையடுத்து இவர்களது கிரிக்கெட் வாழ்க்கை கிட்டதட்ட முடிவுக்கு வந்தது என முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த முன்னாள் வீரர் கிரண் மோரே கூறியது: சேவக், காம்பிர் இருவரும் திறமையானவர்கள். சமீபகாலமாக தேசிய அணியில் இடம் கிடைக்காமல் தவிக்கும் இவர்களது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது எனக் கூறுவது தவறு. 

உள்ளூர் போட்டிகளில் திறமையை நிரூபிக்கும் பட்சத்தில், மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்கலாம். சேவக் குறித்து அனைவருக்கும் நன்கு தெரியும். இவர், உலகின் எந்த ஒரு பகுதியிலும், எந்த ஒரு பவுலரை கண்டு அஞ்சாமல் அதிரடியாக ரன் சேர்க்கும் திறமை படைத்தவர். 

இவர்கள் அணியில் இல்லாத போது, தவான் உள்ளிட்ட வீரர்கள் சிறப்பாக விளையாடினர். இதனால் தான் இவர்கள் மீண்டும் அணியில் இடம் பிடிப்பது தாமதமாகிறது.

ஷிகர் தவான், முரளி விஜய், ரோகித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டனர். ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடும் ரோகித், டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க திறமையை வளர்த்து கொள்ள வேண்டும். 

சமீபத்திய ஜிம்பாப்வே தொடரில் சிறப்பாக செயல்பட்ட அம்பதி ராயுடு, அஜின்கியா ரகானே, தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

இந்திய கேப்டன் தோனிக்கு பின், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயல்படுகிறார். இவரது கீப்பிங் திறமையை காட்டிலும், பேட்டிங்கை வைத்து தான் அணியில் இடம் பிடிக்கிறார்.

இவ்வாறு கிரண் மோரே கூறினார்.

0 comments:

Post a Comment