வரலாறு படைத்தது இளம் இந்தியா - மூன்று மாதம், மூன்று கோப்பை

ஜிம்பாப்வேக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் அசத்திய இளம் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அன்னிய மண்ணில் முதல் முறையாக தொடரை 5-0 என முழுமையாக வென்று வரலாறு படைத்தது.
ஜிம்பாப்வே சென்ற இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா 4-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றி, முன்னிலை வகித்தது. ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி புலவாயோவில் நேற்று நடந்தது.


ரசூல் ஏமாற்றம்:

இந்திய அணியில், அம்பதி ராயுடு, ரோகித் சர்மா நீக்கப்பட்டு, அஜின்கியா ரகானே, ஷிகர் தவான் சேர்க்கப்பட்டனர். காஷ்மீரை சேர்ந்த "ஆல்-ரவுண்டர்' பர்வேஸ் ரசூலுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் விராத் கோஹ்லி, "பீல்டிங்' தேர்வு செய்தார்.


வில்லியம்ஸ் அரைசதம்:

ஜிம்பாப்வே அணிக்கு சிபாண்டா (5), கேப்டன் பிரண்டன் டெய்லர் (0), டிமிசன் மருமா (4) ஏமாற்றினர். மசகட்சா (32), ரவிந்திர ஜடேஜா பந்தில் போல்டானார். அமித் மிஸ்ரா "சுழலில்' வாலர் (8), சிகும்புரா (17), முடாம்போட்சி (4) வெளியேறினர். பொறுப்பாக ஆடிய சீன் வில்லியம்ஸ், அரைசதம் அடித்தார். 

இவரும் 51 ரன்களுக்கு மிஸ்ரா பந்தில் அவுட்டானார். பின் களமிறங்கிய முஷாங்வே (16), விடோரி (4) ஆகியோரும் மிஸ்ராவிடம் சரணடைந்தனர்.
ஜிம்பாப்வே அணி 39.5 ஓவரில் 163 ரன்னுக்கு சுருண்டது. ஜார்விஸ் (12) அவுட்டாகாமல் இருந்தார். 

இந்தியா சார்பில் "சுழலில்' மிரட்டிய அமித் மிஸ்ரா 6 விக்கெட் கைப்பற்றினார்.


தவான் நம்பிக்கை:

சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு மீண்டும் புஜாரா(0) ஏமாற்றினார். பின் இணைந்த ஷிகர் தவான், அஜின்கியா ரகானே ஜோடி நிதானமாக ஆடியது. விடோரி வீசிய 4வது ஓவரில் மூன்று பவுண்டரி அடித்த தவான், 6வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். ஜார்விஸ் பந்தில் தவான் (41) அவுட்டானார். 


ரகானே அரைசதம்:

ரவிந்திர ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்த ரகானே, ஒருநாள் போட்டியில் தனது 3வது அரைசதம் அடித்தார். வாலர் பந்தில் ரகானே (50) வெளியேறினார். வாலர் வீசிய 34வது ஓவரின் கடைசி பந்தை சிக்சருக்கு அனுப்பிய ஜடேஜா வெற்றியை உறுதி செய்தார். 

இந்திய அணி 34 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜடேஜா (48), தினேஷ் கார்த்திக் (10) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்டநாயகன் விருதை இந்தியாவின் அமித் மிஸ்ரா கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 5-0 என முழுமையாக கைப்பற்றி, கோப்பை வென்றது.


முதல் "ஒயிட் வாஷ்'

ஜிம்பாப்வேக்கு "மரண அடி' கொடுத்த இந்திய அணி, அன்னிய மண்ணில் முதன்முறையாக 5-0 என ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியது. முன்னதாக மூன்று முறை சொந்த மண்ணில் நடந்த இங்கிலாந்து (2008-09, 2011-12), நியூசிலாந்து (2010-11) அணிகளுக்கு எதிரான தொடரை 5-0 என முழுமையாக வென்றது.


மூன்று மாதம்...மூன்று கோப்பை

 "உலக சாம்பியன்' இந்திய அணி, கடந்த மூன்று மாதத்தில் மூன்று கோப்பை வென்று "ஹாட்ரிக்' சாதனை படைத்தது. இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி (ஜூன் 6-23) தொடரில் கோப்பை வென்றது. 

பின் வெஸ்ட் இண்டீசில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரை (ஜூன் 28 - ஜூலை 11) கைப்பற்றியது. தற்போது ஜிம்பாப்வே மண்ணில் நடந்த ஒருநாள் தொடரை (ஜூலை 24 - ஆக., 3) வென்றது.

1 comments:

  1. இந்தியாவுக்கு இனி எப்போதும் வெற்றிதான். இது வெற்றி கூட்டணி. 2015 நமக்குதான்

    அமர்க்களம் கருத்துக்களம்
    உலக தமிழ் பேசும் மக்களை ஒன்றிணைக்கும் களம்.
    www.amarkkalam.net

    ReplyDelete