தென் ஆப்ரிக்க தொடருக்கு தயார் - இஷாந்த் சர்மா உற்சாகம்எதிர் வரும் தென் ஆப்ரிக்க தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தயாராக உள்ளேன்,'' என, இஷாந்த் சர்மா தெரிவித்தார்.

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா, 24. இதுவரை 51 டெஸ்ட் (144 விக்.,), 65 ஒரு நாள் (94 விக்.,), 13 "டுவென்டி-20' (8 விக்.,) போட்டியில் விளையாடி உள்ளார். கடந்த மாதம் நடந்த முத்தரப்பு தொடரில் இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் பங்கேற்றார். 

தற்போது ஓய்வில் உள்ள இஷாந்த் சர்மா கூறியது:

கடந்த பிப்ரவரி மாதம் கணுக்கால் காயத்திலிருந்து மீண்ட பின், எனக்கு ஓய்வு கிடையாது. தற்போது, உடற்தகுதி மற்றும் பயிற்சியில் கவனம் செலுத்தி வருகிறேன். 

தவிர, தொடர்ந்து வேகமாக பவுலிங் செய்ய முயற்சிக்கிறேன். இதற்காக காலையில் "ஜிம்', பின் மதியம் பவுலிங், அடுத்து நீச்சல் என, தேசிய கிரிக்கெட் அகாடமியில் கடினமாக பயிற்சி செய்கிறேன். 

சமீபத்தில் நியூசிலாந்து முன்னாள் வீரர் ரிச்சர்டு ஹாட்லி என் பந்துவீச்சு குறித்து தெரிவித்த கருத்தை வரவேற்கிறேன். 

ஏனெனில், ஒவ்வொருவருக்கும் தங்கள் கருத்தை தெரிவிக்க உரிமை உள்ளது.இருப்பினும், இன்னும் சிறப்பாக செயல்பட முயற்சி செய்வேன்.

இங்கிலாந்துக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி பைனலில், முக்கிய கட்டத்தில் கேப்டன் தோனி என்னை பந்துவீச அழைத்தது ஆச்சரியத்தை தந்தது. "இந்த ஓவர் தான் போட்டியில் வெற்றி பெற உதவப் போகிறது,' என்றார். இவரது நம்பிக்கைக்கு ஏற்ப, சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சி.

இதேபோல, எதிர்வரும் தென் ஆப்ரிக்க தொடருக்கும் தயாராக உள்ளேன். உடற்தகுதியை தொடர்ந்து சிறப்பாக வைத்து, இந்திய அணியின் பவுலிங் பிரிவுக்கு தலைமையேற்று முன்னெடுத்து செல்ல விரும்புகிறேன். 

ஆனால், இதற்கு முன் சாம்பியன்ஸ் லீக், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் போன்றவை வரவுள்ளது. முதலில் இதில் கவனம் செலுத்த வேண்டும். 

0 comments:

Post a Comment