சர்ச்சையை கிளப்பும் கவாஜாவின் கேட்ச்

ஆஷஸ் 3-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜாவுக்கு தவறான அவுட் வழங்கப்பட்டதற்கு ஆஸ்திரேலிய பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார். 
மான்செஸ்டரில் நடந்து வரும் ஆஷஸ் 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜாவுக்கு (1 ரன்) கேட்ச் முறையில் அவுட் வழங்கப்பட்ட தீர்ப்பு பெரும் சர்ச்சையையும், விமர்சனத்தையும் கிளப்பியுள்ளது. 

அவர் சுழற்பந்து வீச்சாளர் ஸ்வானின் பந்து வீச்சில், விக்கெட் கீப்பர் மேத் பிரையரிடம் கேட்ச் ஆனதாக நடுவர் டோனி ல் (நியூசிலாந்தை சேர்ந்தவர்) விரலை உயர்த்தினார். 

ஆனால் பந்து பேட்டில் படவே இல்லை என்று திடமாக நம்பிய கஜாவா, நடுவரின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும்படி (டி.ஆர்.எஸ்) முறைப்படி அப்பீல் செய்தார். 

இதையடுத்து ‘ஹாட் ஸ்பாட்’ தொழில்நுட்பத்தில் அவரது அவுட்டை பலமுறை உன்னிப்பாக பரிசோதித்த போது, பந்து அவரது பேட்டில் உரசியதற்கான எந்த ஆதாரமும் தெரியவில்லை. எனவே அவருக்கு கள நடுவர் வழங்கிய தீர்ப்பு மாற்றப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். 

ஆனால் 3-வது நடுவர் தர்மசேனா (இலங்கையைச் சேர்ந்தவர்) அவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு சரியே என்று தடாலடியாக அறிவித்தார். ஏற்கனவே முதலாவது டெஸ்டின் போது டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தால் வெகுவாக பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலியாவுக்கு, மீண்டும் ஒரு முறை குந்தகம் விளைவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கடுமையான அதிருப்தியில் உள்ளது. ‘‘எங்களை பொறுத்தவரை கள நடுவர் மற்றும் 3-வது நடுவர் கொடுத்த இரண்டு தீர்ப்புகளும் தவறானவை. 

இந்த விவகாரம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேம்ஸ் சுதர்லாண்டு கேட்டுக் கொண்டுள்ளார். 

ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ருட்டும் டுவிட்டரில் கடுமையாக சாடியுள்ளார். ‘‘இந்த போட்டியை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் பார்த்தவரையில் நடுவர்களின் மோசமான தீர்ப்புகளில் இதுவும் ஒன்று’’ என்றார். 

இந்த டெஸ்டில் வர்ணனையாளராக பணியாற்றும் ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே பேசும் போது ‘நடுவர்களின் தீர்ப்பை என்னால் நம்ப முடியவில்லை. 

இது தள்ளாட்டமான ஒரு முடிவு. கள நடுவர் தவறான தீர்ப்பை அளித்திருக்கிறார் என்பதற்கான ஆதாரம் ‘ரீப்ளே’யில் தெளிவாக காண முடிந்தது. இதனால் அவருக்கு நாட்-அவுட் வழங்கப்படும் என்று எதிர்பார்த்தோம். இந்த முடிவு உண்மையிலேயே அதிர்ச்சி அளித்தது’ என்றார். 

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலெக் ஸ்டூவர்ட் கூறுகையில், ‘‘இரண்டு நடுவர்களின் முடிவுகளும் அபத்தமானவை. டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் மேலும் ஒரு சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது’’ என்றார். ஆஸ்திரேலிய பத்திரிகைகளும் நடுவர்களை கண்டித்து செய்தி வெளியிட்டுள்ளன.

0 comments:

Post a Comment