கவாஸ்கருக்கு விருது கிடைக்காதது ஏன்?

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கருக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைக்காதது ஏன் என, இப்போது தெரியவந்துள்ளது.

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு பல பிரிவுகளில், மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கப்படுகிறது. 

இந்த ஆண்டு வாழ்நாள் சாதனையாளருக்கான தயான்சந்த் விருதுக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர், விஜய் அமிர்தராஜ் (டென்னிஸ்) உள்ளிட்ட பலரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.

ரூ. 5 லட்சம் மதிப்பிலான இவ்விருதுக்கான இறுதிப் பட்டியலில் கிரிராஜ் சிங் (பாரா விளையாட்டு), மேரி டிசவுசா (தடகளம்), அனில் மேன் (மல்யுத்தம்), சையது அலி (ஹாக்கி) ஆகியோரது பெயர் மட்டும் இடம் பெற்றன. 

கவாஸ்கர், விஜய் அமிர்தராஜ் பெயர்கள் இல்லை. இதற்கான காரணம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, வாழ்நாள் சாதனையாளருக்காக அர்ஜுனா விருது தான் முதலில் வழங்கப்பட்டு வந்தது. 


விதிகளில் மாற்றம்:

இதை உமாபாரதி விளையாட்டு அமைச்சராக இருந்த போது (2002) மாற்றினார். அதாவது, வாழ்நாள் சாதனையாளர் விருதை, மறைந்த ஹாக்கி வீரர் தயான்சந்த் பெயரில் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, 2002க்கு முன் அர்ஜுனா விருது வென்றவர்கள், இந்த விருதுக்கு தேர்வு செய்யப்படக் கூடாது. 


தகுதி தெரியவில்லை:

1975ல் கவாஸ்கர், 1974ல் விஜய் அமிர்தராஜ் அர்ஜுனா விருது பெற்று விட்டனர். இந்நிலையில், வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கான தகுதி என்ன எனத் தெரியாமல், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,), அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏ.ஐ.டி.ஏ.,) இவர்கள் பெயரை பரிந்துரை செய்துள்ளது. 

இதனால் தான் இவர்களுக்கு விருது தரப்படவில்லை என, மத்திய விளையாட்டு விருது கமிட்டி தெரிவித்தது.


யாருக்கு துரோணாச்சார்யா:

சிறந்த பயிற்சியாளருக்காக வழங்கப்படும் துரோணாச்சார்யா விருதுக்கு, ஐந்து பேர் பரிந்துரை செய்யப்பட்டனர். 

இதன் படி, பர்னிமா மகட்டோ (வில்வித்தை), நரேந்திரா சிங் செய்னி (பெண்கள் ஹாக்கி), ராஜ் சிங் (மல்யுத்தம்), கே.பி.தாமஸ் (தடகளம்), மகாவீர் சிங் (குத்துச்சண்டை) ஆகியோரது பட்டியல், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ஜிதேந்திரா சிங் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. 

0 comments:

Post a Comment