ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 300

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 300 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை ஷிகர் தவான் படைக்க வாய்ப்பு உள்ளது,''என, பயிற்சியாளர் லால் சந்த் ராஜ்புட் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்திய அணியின் அதிரடி வீரர் ஷிகர் தவான், 27. அறிமுக டெஸ்ட் (எதிர்- ஆஸி.,) போட்டியில் அதிவேக சதம் அடித்து உலக சாதனை படைத்தார். 

பின் தென் ஆப்ரிக்கா "ஏ' அணிக்கு எதிரான முத்தரப்பு லீக் போட்டியில், 248 ரன்கள் விளாசினார். 

இதன் மூலம், 50 ஓவர் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார். இதற்கு முன் சச்சின், சேவக் மட்டுமே இரட்டை சதம் அடித்திருந்தனர். 

இது குறித்து இந்திய "ஏ' அணி பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புட் கூறியது: 

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக தவான் சிறப்பாக செயல்பட்டார். இதற்கு முன் இம்மாதிரியான ஆட்டத்தை நான் பார்த்தது கிடையாது. சச்சின், சேவக்கை போல தவானும் இரட்டை சதம் அடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. 

இவர் வியக்கத்தக்க "ஷாட்களை' அடித்தார். இதனால், எதிரணியால் பதிலடி கொடுக்க முடியவில்லை. மொத்தம் 30 பவுண்டரி, 7 சிக்சர் அடித்ததால், தென் ஆப்ரிக்க அணி பவுலர்கள் திணறிவிட்டனர். 

தற்போதுள்ள சூழ்நிலையில், எந்தவொரு ஸ்கோரும் சாத்தியமே. இதன்படி, தவான் எதிர்காலத்தில் ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில், ஒரு இன்னிங்சில் 300 ரன்களை எட்ட வாய்ப்பு உள்ளது. 

கடந்த இரண்டு மாதமாக நடந்த சாம்பியன்ஸ் டிராபி, ஜிம்பாப்வே என அனைத்திலும் தவான் அசத்தினார். இவரைப்போல, இளம் வீரர்கள் இருப்பதால், இந்திய அணியின் எதிர்காலம் சிறப்பாக உள்ளது. 

இவ்வாறு லால்சந்த் ராஜ்புட் கூறினார்.

0 comments:

Post a Comment