சூதாட்ட விசாரணையில் அவசரம் ஏன்?



கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக அவசர கதியில் விசாரணையை முடித்த பி.சி.சி.ஐ.,க்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரில் நடந்த "ஸ்பாட் பிக்சிங்' சூதாட்டம் தொடர்பாக ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் சிக்கினர். 

இவர்களை தொடர்ந்து, சென்னை அணியின் "கவுரவ' உறுப்பினரும், முன்னாள் பி.சி.சி.ஐ., தலைவருமான சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன், பாலிவுட் நடிகர் வின்டூ தாராசிங் ஆகியோர் பிடிபட்டு, ஜாமினில் வெளிவந்தனர். பி.சி.சி.ஐ., தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் ஒதுங்கினார். இடைக்கால தலைவராக ஜக்மோகன் டால்மியா நியமிக்கப்பட்டார். 

பின் "ஸ்பாட் பிக்சிங்' சூதாட்டம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஜெயராம் சவுதா, பாலசுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய விசாரணை கமிஷனை பி.சி.சி.ஐ., அமைத்தது. இதன் அறிக்கை நேற்று முன் தினம் பி.சி.சி.ஐ.,யிடம் சமர்ப்பிக்கப்பட்டது. 

இதில் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் அணி உரிமையாளர் ராஜ்குந்த்ரா ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரம் இல்லை என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பி.சி.சி.ஐ., தலைவர் பதவியை மீண்டும் சீனிவாசன் ஏற்பார் என தெரிகிறது.

இந்நிலையில் புதிய திருப்பமாக, குருநாத் மெய்யப்பன் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரம் இருப்பதாக மும்பை போலீஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதுகுறித்து மும்பை போலீஸ் இணை கமிஷனர் (குற்றம்) ஹிமான்ஷு ராய் கூறுகையில்,""பி.சி.சி.ஐ., என்பது தனியார் அமைப்பு என்பதால், இதன் சார்பில் அமைக்கப்பட்ட விசாரணை கமிஷனுக்கு எங்கள் சார்பில் ஒத்துழைப்பு கொடுக்க இயலாது என பதில் கடிதம் அனுப்பினோம். 

குருநாத் மெய்யப்பனுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. விரைவில் இவரை, சட்டத்தின் முன் நிறுத்துவோம்,''என்றார்.


ஆசாத் ஆவேசம்: 

இப்பிரச்னை குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத் கூறுகையில்,""சூதாட்ட விசாரணை தொடர்வதாக டில்லி, மும்பை போலீசார் தெரிவிக்கின்றனர். ஆனால், பி.சி.சி.ஐ., விசாரணைக் குழுவின் அறிக்கைப்படி யாருமே தவறு செய்யவில்லையாம். 

அப்படியானால், பி.சி.சி.ஐ., என்பது நாட்டின் அரசியல் சாசனம் மற்றும் சட்டத்திற்கு மேலானதா என கேட்கிறேன். இதனை உடனடியாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்,''என்றார்.

மத்திய விளையாட்டு அமைச்சக செயலர் பி.கே.தேப் கூறுகையில்,""சூதாட்டம் தொடர்பான போலீஸ் விசாரணை முடியும் வரை பி.சி.சி.ஐ., காத்திருந்திருக்கலாம். மாறாக அவசரப்பட்டு அனைவரையும் விடுவித்துள்ளது. இதன் விசாரணை அறிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்க மாட்டோம்,''என்றார்.


நிரஞ்சன் ஷா விளக்கம்

பி.சி.சி.ஐ.,யின் துணை தலைவர் நிரஞ்சன் ஷா கூறுகையில், ""பி.சி.சி.ஐ., விசாரணை கமிஷன் அறிக்கையை இறுதியானதாக எடுத்துக் கொள்வோம். போலீஸ் விசாரணை முடியும் வரும் வரை காத்திருக்க தேவையில்லை என நினைக்கிறேன். ஒருவேளை போலீஸ் விசாரணையில் யார் மீதாவது குற்றம் நிரூபிக்கப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

0 comments:

Post a Comment