ஆஸ்திரேலிய தொடரில் யாருமே எதிர்பாராத வகையில், வியக்கத்தக்க வகையில் எழுச்சி பெற்று அசத்தினார் இளம் வீரர் ரவிந்திர ஜடேஜா.
கடந்த 2008ல் ராஜஸ்தான் ஐ.பி.எல்., அணி மூலம், ஜடேஜாவை வெளியுலகிற்கு கொண்டு வந்தது ஆஸ்திரேலிய அணியின் வார்ன் தான். இத்தொடரில் ராஜஸ்தான் கோப்பை வெல்ல, இந்திய "டுவென்டி-20' அணியில் இடம் பெற்றார். இடதுகை சுழற்பந்து வீச்சாளரான இவர், அவ்வப்போது ஏற்ற இறக்கங்களுடன் செயல்பட்டு வந்தார்.
கடைசியில், கடந்த 2012 தொடரில் சென்னை அணிக்காக ரூ. 10.66 கோடிக்கு வாங்கப்பட்டார். இருப்பினும், ஐந்தாவது தொடரில் பெரியளவில் சாதிக்க முடியவில்லை. அதேநேரம் கேப்டன் தோனியின் ஆதரவு இவருக்கு தொடர்ந்து கிடைத்தது.
புதிய சாதனை:
முதல் தர கிரிக்கெட்டில் மூன்று முறை "டிரிபிள்' சதம் (314, 303, 331) அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை சமீபத்தில் படைத்தார் ஜடோஜா. இதனால், டெஸ்ட் அணியில் இவரை சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
கடந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பிரக்யான் ஓஜாவுக்குப் பதில், சென்னை டெஸ்டில் ஜடேஜாவை களமிறக்கினார் தோனி. நிறைய பேரின் புருவங்கள் உயர்ந்தன. கடைசியில் விமர்சகர்கள் வாயை அடைந்து, தன் மீது கேப்டன் வைத்த நம்பிக்கையை காப்பாற்றினார்.
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய அணி 4-0 என, வென்று புதிய வரலாறு படைத்தது. பவுலிங்கில் அசத்திய அஷ்வின் (29 விக்.,) தொடர் நாயகன் ஆனார். பேட்டிங்கில் முரளி விஜய் (430), புஜாரா (419) இருவரும் 400 ரன்களுக்கும் மேல் குவித்தனர்.
அசத்தல் பவுலிங்:
இவை அனைத்தையும் விட ஆச்சரியம் ரவிந்திர ஜடேஜா, 24, தான். இத்தொடரில் தொடர்ந்து சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தினார். பந்தை வேகமாக அனுப்பும் இவர், சரியான அளவு, நீளத்தில், "ஆப்-ஸ்டம்ப்' அல்லது "மிடில்-ஸ்டம்ப்பை' துல்லியமாக தாக்கும் வகையில் பவுலிங் செய்கிறார்.
அனைத்து பந்தையும் இதேபோல வீசுவதால், பேட்ஸ்மேன்கள் திணறிப் போக, எதிரணியினரால் எழுந்திருக்கவே முடியவில்லை. ஆஸ்திரேலிய தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் இவருக்குத் தான் இரண்டாவது (24) இடம்.
சிறந்த பந்து:
சில நேரங்களில் நம்பமுடியாத அளவில் பவுலிங் செய்தார். ஐதராபாத் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் மைக்கேல் கிளார்க் வந்த வேகத்தில், இவரது சுழலில் ஏமாந்து "டக்' அவுட்டானார். ஜடேஜா வீசிய பந்தை "இந்த நூற்றாண்டின் சிறந்த பந்துவீச்சு' என வர்ணித்தார் இந்திய ஜாம்பவான் கவாஸ்கர்.
ஆட்ட நாயகன்:
இந்திய மண்ணில் சுழற்பந்து வீச்சை கிளார்க் தான் நன்கு எதிர்கொள்வார் என நம்பப்பட்டது. இதை தவிடு பொடியாக்கினர் ஜடேஜா. கிளார்க்கின் ஆறு இன்னிங்சில், 5 முறை இவரிடம் தான் சிக்கினார். டில்லி டெஸ்டில் 7 விக்கெட் கைப்பற்றிய இவர், முதல் இன்னிங்சில் 43 ரன்கள் எடுக்க, ஆட்டநாயகன் விருதை வென்றார்.
எதிர்காலம் எப்படி:
இந்திய ஆடுகளில் இவர் அசத்தினாலும், அன்னிய மண்ணில் சாதிப்பது சிரமம் தான். இதற்கேற்ப பேட்டிங்கிலும் எழுச்சி பெற்றால், அனைத்து வித ஆடுகளங்களிலும் சாதித்து, சிறந்த "ஆல்-ரவுண்டராக' அணியில் இடத்தை தக்கவைக்கலாம்.
0 comments:
Post a Comment