கோல்கட்டா அணிக்கு எதிரான பிரிமியர் கிரிக்கெட் லீக் போட்டியில் மைக்கேல் ஹசி அதிரடி ஆட்டம் கைகொடுக்க, சென்னை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
இந்தியாவில், 6வது பிரிமியர் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடந்த லீக் போட்டியில் சென்னை, கோல்கட்டா அணிகள் மோதின. டாஸ் வென்ற கோல்கட்டா அணி கேப்டன் காம்பிர் பீல்டிங் தேர்வு செய்தார்.
சென்னை அணிக்கு சகா, மைக்கேல் ஹசி சிறப்பான துவக்கம் கொடுத்தனர். பாலாஜி ஓவரில் ஹசி, மூன்று பவுண்டரிகள் விளாசினார். தன் பங்கிற்கு ஷமி அகமது ஓவரில் சகா இரு பவுண்டரிகள், ஒரு சிக்சர் அடித்தார்.
இவர் பாட்யா பந்தில் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஹசி (95) சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். பின் வந்த ரெய்னா 44 ரன்களில் பெவிலியன் திரும்பினார். முடிவில், சென்னை அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்தது. தோனி (18), ஜடேஜா (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
கோல்கட்டா அணி சார்பில் பாட்யா, நரைன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
கடின இலக்கை துரத்திய கோல்கட்டா அணிக்கு காம்பிர், பிஸ்லா ஜோடி துவக்கம் தந்தது. காம்பிர் (14) ஏமாற்றினார். மறுமுனையில், மோரிஸ் வீசிய ஓவரில் பிஸ்லா "ஹாட்ரிக்' பவுண்டரி விரட்டினார்.
அஷ்வின் பந்துவீச்சிலும் பவுண்டரி அடித்து அசத்திய இவரால் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. பிரண்டன் மெக்கலம் (6), காலிஸ் (19) நீடிக்கவில்லை.
இக்கட்டான நேரத்தில் பிஸ்லா (92) ரன்-அவுட்டாக, அணியின் தோல்வி உறுதியானது. முடிவில், கோல்கட்டா அணி 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்து, தோல்வியடைந்தது. இயான் மார்கன் (32), யுசுப் பதான் (3) அவுட்டாகாமல் இருந்தனர்.
சென்னை அணி சார்பில் மோகித் சர்மா, மோரிஸ், பிராவோ தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
0 comments:
Post a Comment