கெய்ல் இல்லாமல் சாதிக்க முடியுமா?


அதிரடி துவக்க வீரர் கெய்ல் இல்லாமலும் போட்டியில் வெற்றி பெற முடியும்,'' என்று பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி. சிங் தெரிவித்தார். 

இந்தியாவில் ஆறாவது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. இதில் பெங்களூரு அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வெஸ்ட் இண்டீசின் கெய்ல் உள்ளார். மும்பை அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் சிக்சர் மழை பொழிந்த கெய்ல் 92 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு கைகொடுத்தார். 

ஐதராபாத் அணிக்கு எதிரான மூன்றாவது லீக் போட்டியில் இவர் சோபிக்கவில்லை. ஆனாலும், கேப்டன் கோஹ்லி அசத்த, பெங்களூரு வெற்றி பெற்றது. 

இதுகுறித்து ஆர்.பி.சிங் கூறியது:

ரசிகர்களுக்கு கெய்ல் தான் நம்பிக்கை நாயகன். ஆனால் எல்லா போட்டிகளிலும் அவர் கைகொடுப்பார் என்று நம்பமுடியாது. அவரை தவிர்த்து எங்கள் அணியில் கேப்டன் கோஹ்லி, டிவிலியர்ஸ் உள்ளிட்ட திறமையான வீரர்கள் உள்ளனர். 

கெய்ல் கைகொடுக்கவில்லை என்றால் போட்டியில் தோல்விதான் என்ற நிலை எங்கள் அணிக்கு இல்லை. 

ஐதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கோஹ்லி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

இதற்கு அவர் திட்டம் வகுத்து செயல்பட்டதே முக்கிய காரணம். பெங்களூரு அணிக்கு கிடைத்த சிறந்த பேட்ஸ்மேன்களில் கோஹ்லியும் ஒருவர். 

எந்த நேரத்திலும் போட்டியின் முடிவை மாற்றும் திறமை அவரிடம் உள்ளது. 

இவ்வாறு ஆர்.பி.சிங் கூறினார். 

0 comments:

Post a Comment