டில்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங்கில் அசத்திய மைக்கேல் ஹசி அரைசதம் அடித்தார். மீண்டும் சொதப்பிய டில்லி அணி, தொடர்ந்து 6வது தோல்வியை பெற்றது.
ஆறாவது ஐ.பி.எல்., தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. டில்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடந்த தொடரின் 24வது லீக் போட்டியில் டில்லி டேர்டெவில்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
மீண்டும் ஹசி:
சென்னை அணியில் காயம் காரணமாக டிர்க் நானஸ் நீக்கப்பட்டு, மீண்டும் மைக்கேல் ஹசி இடம் பிடித்தார். அனிருதா ஸ்ரீகாந்துக்கு பதிலாக மோஹித் சர்மா சேர்க்கப்பட்டார். டில்லி அணியில் ஆஷிஸ் நெஹ்ரா, பென் ரோரர் நீக்கப்பட்டு அஜித் அகார்கர், ஜீவன் மெண்டிஸ் தேர்வு செய்யப்பட்டனர். "டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, "பேட்டிங்' தேர்வு செய்தார்.
ஹசி அரைசதம்:
முதலில் "பேட்' செய்த சென்னை அணிக்கு மைக்கேல் ஹசி, முரளி விஜய் ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. மார்னே மார்கல் "வேகத்தில்' முரளி விஜய் (18) அவுட்டானார். பின் இணைந்த மைக்கேல் ஹசி, சுரேஷ் ரெய்னா ஜோடி பொறுப்பாக விளையாடியது.
ஒன்று, இரண்டாக ரன் எடுத்த இவர்கள் அவ்வப்போது பவுண்டரி அடித்தனர். இரண்டாவது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்த போது, இர்பான் பதான் பந்தில் ரெய்னா (30) வெளியேறினார். அகார்கர், நதீம் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட மைக்கேல் ஹசி அரைசதம் அடித்தார்.
தோனி அதிரடி:
பவுண்டரி அடித்து ரன் கணக்கை துவக்கிய கேப்டன் தோனி, மார்னே மார்கல் வீசிய 18வது ஓவரில் அடுத்தடுத்து ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். இதே ஓவரில் மைக்கேல் ஹசி தன்பங்கிற்கு இரண்டு பவுண்டரி அடிக்க, சென்னை அணிக்கு 19 ரன்கள் கிடைத்தது.
அதிரடியாக ஆடிய தோனி 22 பந்தில் 44 ரன்கள் (ஒரு சிக்சர், 5 பவுண்டரி) எடுத்த போது, உமேஷ் யாதவ் பந்தில் அவுட்டானார். ஆட்டத்தின் கடைசி பந்தில் 2வது ரன்னுக்கு ஆசைப்பட்ட டுவைன் பிராவோ (3) "ரன்-அவுட்' ஆனார்.
சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்தது. மைக்கேல் ஹசி (65) அவுட்டாகாமல் இருந்தார். டில்லி அணி சார்பில் இர்பான் பதான், மார்னே மார்கல், உமேஷ் யாதவ் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
வார்னர் ஏமாற்றம்:
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய டில்லி அணி, சென்னை கிங்ஸ் "வேகத்தில்' திணறியது. மோஹித் சர்மா பந்தில் டேவிட் வார்னர் (1), மன்பிரித் ஜுனேஜா (2) அவுட்டானார்கள்.
அடுத்து வந்த கேப்டன் மகிளா ஜெயவர்தனாவை (6), கிறிஸ் மோரிஸ் வெளியேற்றினார். ஆல்பி மார்கல் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட சேவக், கிறிஸ் மோரிஸ் பந்தில் ஒரே ஒரு பவுண்டரி அடித்தார். இவர், 17 ரன்கள் எடுத்த போது மோஹித் சர்மாவிடம் சரணடைந்தார்.
பின் இணைந்த ஜீவன் மெண்டிஸ், கேதர் ஜாதவ் ஜோடி நிதானமாக ஆடியது. ஒன்று, இரண்டாக ரன் எடுத்த இவர்கள், ஐந்தாவது விக்கெட்டுக்கு 31 ரன்கள் சேர்த்த போது, ஜீவன் மெண்டிஸ் (12) "ரன்-அவுட்' ஆனார். அடுத்து வந்த இர்பான் பதான் (2), அஜித் அகார்கர் (3), மார்னே மார்கல் (2) சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர்.
சிறிது நேரம் தாக்குப்பிடித்த கேதர் ஜாதவ் (31), ஆல்பி மார்கல் பந்தில் அவுட்டானார். டுவைன் பிராவோ பந்தில் உமேஷ் யாதவ் (1) சரணடைய, டில்லி அணி 17.3 ஓவரில் 83 ரன்களுக்கு சுருண்டது. நதீம் (2) அவுட்டாகாமல் இருந்தார். சென்னை அணி சார்பில் மோஹித் சர்மா 3, அஷ்வின் 2, ஆல்பி மார்கல், கிறிஸ் மோரிஸ், டுவைன் பிராவோ, ரவிந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
செம மேட்ச் சூப்பரா இருந்தது...
ReplyDeleteசென்னை பேட்டிங் அண்ட் பீல்டிங் சூப்பர்.
உங்கள் செய்தி அருமை யா இருக்கு நிச்சயம் மேட்ச் பாக்கதவர்களுக்கு விளக்கமாக இருக்கும்