மிஸ்ரா ஹாட்ரிக் - ஐதராபாத் வெற்றி


ஐ.பி.எல்., லீக் போட்டியில், அமித் மிஸ்ரா "ஹாட்ரிக்' சாதனை படைக்க, ஐதராபாத் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி கட்டத்தில் விக்கெட்டுகளை விரைவாக இழந்த புனே அணி ஏமாற்றம் அளித்தது.

ஆறாவது ஐ.பி.எல்., தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. நேற்று புனேயில் நடந்த தொடரின் 22வது லீக் போட்டியில் புனே வாரியர்ஸ், ஐதராபாத் அணிகள் மோதின.


ஒயிட் கேப்டன்:

சங்ககரா ஓய்வு எடுத்துக் கொள்ள, ஐதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பை காமிரான் ஒயிட் ஏற்றார். மாற்று வீரராக குயின்டன் டி காக் அறிமுகமானார். ரவி தேஜாவுக்கு பதிலாக சமந்த்ரே இடம் பிடித்தார். புனே அணியில் ராஸ் டெய்லர் நீக்கப்பட்டு, மாத்யூஸ் சேர்க்கப்பட்டார். "டாஸ்' வென்ற புனே கேப்டன் மாத்யூஸ், "பீல்டிங்' தேர்வு செய்தார்.


புவனேஷ்வர் அபாரம்:

ஐதராபாத் அணி துவக்கத்திலேயே ஆட்டம் கண்டது. டிண்டா பந்தில் குயின்டன் டி காக் (2) அவுட்டானார். பின் புவனேஷ்வர் குமார் போட்டுத் தாக்கினார். இவரது "வேகத்தில்' பார்த்திவ் படேல் (12), கேப்டன் காமிரான் ஒயிட் (0), ஹனுமா விஹாரி (1) ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். 

"மிடில்-ஆர்டரில்' களமிறங்கிய கரண் சர்மா (7), திசாரா பெரேரா (2) நிலைக்கவில்லை. இதனால் ஐதராபாத் அணி 6 விக்கெட்டுக்கு 44 ரன்கள் எடுத்து திணறியது. 


சமந்த்ரே ஆறுதல்:

அடுத்து வந்த அமித் மிஸ்ராவுடன் இணைந்த சமந்த்ரே பொறுப்பாக ஆடினார். ஏழாவது விக்கெட்டுக்கு 35 ரன்கள் சேர்த்த போது, ராகுல் சர்மா "சுழலில்' சமந்த்ரே (37) சிக்கினார். பின் இணைந்த அமித் மிஸ்ரா, ஆஷிஸ் ரெட்டி ஜோடி ஓரளவு கைகொடுக்க, அணியின் ஸ்கோர் 100 ரன்களை தாண்டியது. எட்டாவது விக்கெட்டுக்கு 40 ரன்கள் சேர்த்த போது அமித் மிஸ்ரா (30) "ரன்-அவுட்' ஆனார்.

ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 119 ரன்கள் எடுத்தது. ஆஷிஸ் ரெட்டி (19), ஸ்டைன் (4) அவுட்டாகாமல் இருந்தனர். புனே அணி சார்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட் கைப்பற்றினார்.


இரட்டை "அடி':

சுலப இலக்கை விரட்டிய புனே அணிக்கு ராபின் உத்தப்பா, ஆரோன் பின்ச் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. அபாரமாக ஆடிய இவர்கள், இஷாந்த் சர்மா, ஸ்டைன் பந்தை பவுண்டரிகளாக விரட்டினர். இந்நிலையில் 5வது ஓவரை வீசிய திசாரா பெரேரா இரட்டை "அடி' கொடுத்தார். 

இரண்டாவது பந்தில் ராபின் உத்தப்பாவை (22) அவுட்டாக்கிய இவர், 3வது பந்தில் ஆரோன் பின்ச்சை (16) வெளியேற்றினார். நான்காவது பந்தை ஸ்டீவன் ஸ்மித் தடுத்தாட, "ஹாட்ரிக்' வாய்ப்பு நழுவியது.


மிஸ்ரா "ஹாட்ரிக்':

அடுத்து வந்த சுமன் (12) ஏமாற்றினார். ஒரு பவுண்டரி கூட அடிக்காத ஸ்டீவன் ஸ்மித் (17) பெரிய அளவில் சோபிக்கவில்லை. மிஸ்ரா பந்தில் சிக்சர் அடித்த மிட்சல் மார்ஷ் (14) நிலைக்கவில்லை. ஆட்டத்தின் 19வது ஓவரை வீசிய அமித் மிஸ்ரா, "ஹாட்ரிக்' சாதனை படைத்தார். 

முதலில் கேப்டன் மாத்யூசை (20) அவுட்டாக்கினார். பின், புவனேஷ்வர் குமார் (0), ராகுல் சர்மா (0), அசோக் டிண்டா (0) ஆகியோரை அடுத்தடுத்து அவுட்டாக்கி "ஹாட்ரிக்' சாதனை படைத்தார்.

புனே அணி 19 ஓவரில் 108 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. மனிஷ் பாண்டே (7) அவுட்டாகாமல் இருந்தார். ஐதராபாத் அணி சார்பில் அமித் மிஸ்ரா 4, திசாரா பெரேரா 3 விக்கெட் வீழ்த்தினர். 

ஆட்டநாயகன் விருதை ஐதராபாத் அணியின் அமித் மிஸ்ரா கைப்பற்றினார்.


புதிய வரலாறு

புனே அணிக்கு எதிராக "சுழலில்' அசத்திய ஐதராபாத் அணியின் அமித் மிஸ்ரா, ஐ.பி.எல்., வரலாற்றில் மூன்று முறை "ஹாட்ரிக்' சாதனை படைத்த முதல் வீரர் என்ற புதிய வரலாறு படைத்தார். கடந்த 2008ல் டில்லி அணிக்காக விளையாடிய இவர், டெக்கான் அணிக்கு எதிராக முதன்முதலில் இச்சாதனை படைத்தார். பின், 2011ல் டெக்கான் அணிக்காக விளையாடிய இவர், பஞ்சாப் அணிக்கு எதிராக "ஹாட்ரிக்' விக்கெட் கைப்பற்றினார்.

0 comments:

Post a Comment