கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார் தோனி

டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து தோனி நீக்கப்படுகிறார். இவருக்கு பதிலாக சேவக் புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என தெரிகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் தோற்ற இந்திய அணி, தொடரை முழுமையாக இழந்தது. இதையடுத்து, அணியில் அதிரடி மாற்றங்களை செய்ய இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) முடிவு செய்துள்ளது.

முதலில் கேப்டன் மாற்றப்பட உள்ளார். இதன் மூலம் தோனி மற்றும் சேவக் இடையிலான "ஈகோ' பிரச்னைக்கு முடிவு காணலாம். கேப்டன் என்ற முறையில் தன்னால் சேவக்கை கட்டுப்படுத்த இயலவில்லை என தோனி புலம்புகிறார். துவக்க வீரராக பொறுப்பாக "பேட்' செய்யவில்லை என புகார் கூறுகிறார்.

மறுபக்கம் தோனியின் கேப்டன் உத்திகளை ஏற்க மறுக்கிறார் சேவக். வீரர்கள் தேர்வு, "பீல்டிங்' வியூகம் போன்றவற்றில் தோனி தவறு செய்வதாக குறிப்பிடுகிறார். துணை கேப்டன் என்ற முறையில் தன்னிடம் கலந்து ஆலோசிப்பது இல்லை என்றும் குற்றம்சாட்டுகிறார். இவர்களது மோதல், அணியில் பிளவை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் இருந்து 2013ல் ஓய்வு பெறப் போவதாக தோனி தன்னிச்øயாக அறிவித்தது தேர்வாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பி.சி.சி.ஐ., நிர்வாகி ஒருவர் கூறுகையில்,""ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடந்து கொண்டிருக்கும் போது, 2013ல் நடக்க வேண்டிய விஷயம் பற்றி பேச வேண்டிய அவசியமில்லை,''என்றார்.

தோனிக்கு பாடம் புகட்டும் வகையில், அவரை டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து நீக்க, பி.சி.சி.ஐ, முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. புதிய கேப்டனாக சேவக் நியமிக்கப்படலாம். தவிர, டிராவிட், லட்சுமண் ஆகியோரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டதாகவும் தேர்வாளர்கள் கருதுகின்றனர்.

எனவே, ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, சத்தேஷ்வர் புஜாரா போன்ற இளம் வீரர்களை சேர்க்க முடிவு செய்துள்ளனர். யுவராஜ் உடல்நலம் தேறும்பட்சத்தில் அவருக்கும் டெஸ்டில் வாய்ப்பு தரப்படும்.

கேப்டன் மாற்றம் மட்டும் சாதிக்க உதவாது. ஏனென்றால், தோனிக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக அடிலெய்டு டெஸ்டில் கேப்டன் பொறுப்பை ஏற்ற சேவக், அணிக்கு வெற்றி தேடித் தர முடியவில்லை.

வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் அமைத்தல், இளம் ரத்தம் பாய்ச்சும் வகையில் பாரபட்சமற்ற வீரர்கள் தேர்வு மற்றும் இந்திய கிரிக்கெட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்தினால் தான், அன்னிய மண்ணில் வெற்றிக் கொடி நாட்ட முடியும்.

0 comments:

Post a Comment