சிட்னி ஆடுகளம் யாருக்கு சாதகம்

சிட்னி ஆடுகளம் "சுழலுக்கு ஒத்துழைக்குமா அல்லது "வேகத்துக்கு கைகொடுக்குமா என்ற குழப்பம் நீடிக்கிறது. இது ஆஸ்திரேலிய அணியில் பிளவை ஏற்படுத்தியுள்ளது.

நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கி இந்திய அணியை சிதறடிக்க, கேப்டன் மைக்கேல் கிளார்க் திட்டமிடுகிறார். அதே நேரத்தில் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், ஒரு சுழற்பந்துவீச்சாளர் கட்டாயம் வேண்டுமென வலியுறுத்துவதால், பிரச்னை வெடித்துள்ளது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. மெல்போர்னில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.


மாறிய களம்:

இரண்டாவது டெஸ்ட் நாளை சிட்னியில் துவங்குகிறது. இங்குள்ள ஆடுகளம் பொதுவாக சுழலுக்கு ஒத்துழைக்கும். ஆனால், கடந்த ஆண்டு நடந்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மோதிய "ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் மொத்தம் வீழ்ந்த 30 விக்கெட்டுகளில், 3 விக்கெட்டை தான் சுழற்பந்துவீச்சாளர்கள் கைப்பற்றினர்.

இது, சிட்னி ஆடுகளம் "வேகத்துக்கு சாதகமாக மாறியிருப்பதை சுட்டிக் காட்டியது. இதே நிலை இம்முறையும் தொடரலாம். இதன் காரணமாக தான் ஆஸ்திரேலிய அணியில் அவசர அவசரமாக "வேகப்புயல் ரியான் ஹாரிஸ் சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து பீட்டர் சிடில், ஹில்பெனாஸ், பட்டின்சன், ஹாரிஸ் என நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கி இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்க, கேப்டன் மைக்கேல் கிளார்க் திட்டம் வகுத்து இருக்கிறார். இதற்கு பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. "எல்லாம் வேகம் என்ற கொள்கையில் தனக்கு உடன்பாடில்லை என தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆர்தர் கூறுகையில்,""பந்துவீச்சாளர்கள் தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கவில்லை. சிட்னி ஆடுகளம் பாரம்பரியமாக சுழலுக்கு ஒத்துழைக்கும். என்னை பொறுத்தவரை "ஸ்பின்னர் இல்லாமல் களமிறங்குவதை ஏற்க முடியாது.

மெல்போர்ன் டெஸ்டில் நாதன் லியான் "சுழலை இந்திய வீரர்கள் எளிதாக சமாளித்தனர். வலுவான இலக்கை நிர்ணயிக்கும் பட்சத்தில் எதிரணிக்கு இவர் நிச்சயமாக சவால் கொடுப்பார்,என்றார்.


வானிலை முக்கியம்:

ஆடுகள பராமரிப்பாளர் டாம் பார்க்கர் கூறுகையில்,""கடந்த ஆண்டு ஆஷஸ் போட்டிக்கு அமைக்கப்பட்ட ஆடுகளம் போல் இருக்கும்.

இரு அணிகளுக்கும் சாதகமாக அமையும். இதன் தன்மை, வானிலையை பொறுத்து மாறும். மேகமூட்டத்துடன் காணப்பட்டால், பந்துகள் நன்கு "ஸ்விங் ஆகும். போகப் போக "சுழலுக்கும் கைகொடுக்கும்,என்றார்.

0 comments:

Post a Comment