இந்திய அணியின் கடைசி வாய்ப்பு

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் இந்திய அணி 0-2 என பின்தங்கியுள்ளது. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட், பெர்த் மைதானத்தில் இன்று துவங்குகிறது.

இது குறித்து அக்ரம் கூறியது:

பெர்த் ஆடுகளம் வேகப்பந்து வீச்சு சாதகமாகவும், நன்கு "பவுன்ஸ்' ஆகும். இங்கு பெரும்பாலும் ஆஸ்திரேலிய அணி தான் வெற்றி பெற்றுள்ளது. இருந்தாலும், கடந்த 2008ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. எனவே இன்றும் கவனமுடன் செயல்பட்டால் வெற்றி பெறலாம்.

முதல் இரண்டு போட்டியில் இந்திய வீரர்களின் செயல்பாடு உண்மையிலேயே மிகவும் மந்தமாக இருந்தது. ரோகித் சர்மா உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு தேர்வு குழுவினர் வாய்ப்பு அளிக்க வேண்டும்.

ஏனென்றால் லட்சுமண், சச்சின், டிராவிட் உள்ளிட்ட அனுபவ வீரர்கள் தொடர்ந்து அணிக்காக விளையாட முடியாது. கடந்த ஒரு வருடமாக டெஸ்ட் தொடரில் இந்திய அணி சொதப்பி வருகிறது.

சிட்னி, மெல்போர்ன் இரண்டிலும் சச்சின் மட்டும் தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இன்றைய போட்டி இந்திய அணிக்கு வாழ்வா, சாவா போட்டி என்பதால் இதில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என நினைக்கிறேன்.

தோல்வி அடையும் அணி விமர்சனத்திற்குள்ளாவது இயற்கை தான். தேவையற்ற விமர்சனத்தை தவிர்க்க வெற்றி பெறுவது தான் ஒரே வழி. பெர்த் வெற்றி இந்திய அணிக்கு பெரும் திருப்பு முனையாக அமையும். கடந்த தோல்விகளை மறந்து புத்துணர்ச்சியுடன் களமிறங்கினால் சாதிக்கலாம்.

இவ்வாறு அக்ரம் கூறினார்.

0 comments:

Post a Comment