கேப்டன் தோனியை நீக்க வேண்டும்

தோனியை டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும். சீனியர் வீரர்கள் லட்சுமண், டிராவிட் இருவரும் ஓய்வு பெற வேண்டும்,'' என, கங்குலி உள்ளிட்ட இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் ஆவேசமாக தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, முதல் இரண்டு டெஸ்டில் தோல்வியடைந்தது. பெர்த்தில் நடக்கும் மூன்றாவது டெஸ்டிலும் மோசமான நிலையில் உள்ளது.


தோனி வேண்டாம்:

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மதன் லால் கூறுகையில்,""டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனியை நீக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

புது சிந்தனையுடன் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்லும் மற்றொரு வீரரை கொண்டு வருவதற்கான சரியான நேரம் இதுதான் என்று நினைக்கிறேன்,'' என்றார்.


விலக வேண்டும்:

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கூறியது:

ஈடன் கார்டனில் டிராவிட், லட்சுமண் இருவரும் சாதித்தது போல, மீண்டும் வேண்டும் என, நாம் எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் இவர்கள் இப்போது 40 வயதை நெருங்குகின்றனர்.

சொந்த மண்ணில் திறமை வெளிப்படுத்தினாலும், அடுத்து 2013ல் இந்திய அணி அன்னிய மண்ணில் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும். இதற்கு முன், தானாக ஓய்வு பெறுவது குறித்து, இந்த வீரர்கள் முடிவெடுக்க வேண்டும்.


இடம் கிடைக்காது:

தற்போதைய நிலையில் பெர்த் மட்டுமல்ல, அடிலெய்டிலும் தோல்வி தான் கிடைக்கும் என்று தெரிகிறது. கேப்டன் தோனி மீதமுள்ள மூன்று இன்னிங்சில், தனது பேட்டிங் திறமையை நிரூபிக்க வேண்டும்.

இல்லையென்றால் 11 பேர் கொண்ட அணியில் இடம் பிடிப்பதே சிக்கலாகி விடும். இத்தொடருக்குப் பின் இந்திய அணியில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும்.
இவ்வாறு கங்குலி கூறினார்.


என்ன பயன்?

கபில்தேவ் கூறுகையில்,""பணம் மற்றும் உலக கிரிக்கெட்டை கட்டுபடுத்துவதில், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) நல்ல நிலையில் உள்ளது. இவ்வளவு செல்வாக்கு இருந்து என்ன பயன், அன்னிய மண்ணில் இந்திய அணி தொடர் தோல்வியைத் தான் சந்திக்கிறது. பி.சி.சி.ஐ., உண்மையில் ஒரு வலிமையான அணியை உருவாக்கவில்லை,'' என்றார்.

0 comments:

Post a Comment