கேப்டன் தகுதி சேவக்கிற்கு உண்டா?

இந்திய அணியின் கேப்டன் பதவி குறித்து பேச, இது சரியான நேரமல்ல. சேவக்கிற்கு கேப்டனாகும் தகுதியில்லை, என, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

அன்னிய மண்ணில் பங்கேற்ற டெஸ்ட் போட்டிகளில், தொடர்ந்து 8 தோல்வியடைந்ததால், கேப்டன் தோனியை மாற்ற வேண்டும் என, விவாதம் எழுந்துள்ளது. இதுகுறித்து வாசிம் அக்ரம் கூறியது:

அடுத்தடுத்த தோல்விகளால் எல்லாம் தோனியை நீக்குவது குறித்தே பேசுகின்றனர். இதுபற்றி பேச சரியான தருணம் இதுவல்ல. இப்போதும் சரி, எப்போதும் சரி இந்திய அணிக்கு தலைமை தாங்க தோனி தான் சரியான நபர் என்று நம்புகிறேன்.

சமீபகாலமாக அன்னிய மண்ணில் அடைந்த தோல்விகள் காரணமாக, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தோனியை "பலிகடா ஆக்க முயற்சிப்பது அழகல்ல.இந்திய துணைக்கண்டத்தில் இதுதான் பல காலமாக நடக்கிறது. மீடியாவும் இதைத்தான் விரும்புகிறது.


சேவக் வேண்டாம்:

இவருக்குப் பதில் சேவக் அல்லது விராத் கோஹ்லியை கேப்டனாக்க முயற்சிப்பதாக தெரிகிறது. என்னைப் பொறுத்தவரையில் இந்த இருவருக்குமே கேப்டானகும் தகுதியில்லை. அடிலெய்டில் கேப்டனாக, இந்திய அணி பெருமைப்படத்தக்க வகையில் சேவக், ஒன்றும் செய்துவிடவில்லை. இவரிடம் அதிகம் எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.


கோஹ்லி குழந்தை:

விராத் கோஹ்லியை பொறுத்தவரையில் இன்னும் குழந்தை தான். இப்போது தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்துள்ளார். குறைந்தது இன்னும் 5 ஆண்டுகள் இவர் காத்திருக்க வேண்டும். டெஸ்ட் கேப்டனாக தோனி போதுமான அளவு செயல்படவில்லை என்பது உண்மை தான். அதேநேரம், 2 தொடர்களில் தோற்றோம் என்பதற்காக இவரை வெளியேற்ற வேண்டும் என்று அர்த்தமல்ல. அணியை முன்னேற்ற பி.சி.சி.ஐ.,க்கு இந்த வழிதான் உள்ளதா?


பவுலிங் சுமார்:

டெஸ்ட் தொடரைப் போல, பவுலிங் தான் இன்னும் கவலையாக உள்ளது. இஷாந்த் சர்மாவிடம் பெரியளவில் எதிர்பார்த்து, ஏமாற்றம் தான் கிடைத்தது. எல்லோரும் இவருக்கு அதிர்ஷ்டம் இல்லை என்கின்றனர். இதெல்லாம் திறமையற்றவர்கள் சொல்லும் காரணம். 45 டெஸ்டில் பங்கேற்ற பின்பும் எப்படி பொறுப்பாக செயல்படுவது என்பது குறித்து இவர் கற்றுக் கொள்ளவில்லை.

வேகப்பந்து வீச்சாளர் என்பவர் பெர்த், மெல்போர்னில் கூட சிறப்பாக செயல்பட முடியவில்லையே. முதலில் ஆடுகளத்தில் ஒரு பக்கத்தில் மட்டும் எப்படி பவுலிங் செய்வது என்பதை இவர் கற்றுக் கொண்டால் போதும்.


புதிய அணி:

ஆஸ்திரேலியாவில் இந்திய அணி இன்னும் அதிக போட்டிகளில் பங்கேற்க உள்ளது. ரெய்னா, ஜடேஜா, பிரவீண் குமார் அணியில் இணைந்துள்ளனர். "டுவென்டி-20, ஒருநாள் போட்டிகளுக்கு வலுவான இந்திய அணி களமிறங்குகிறது. இன்றைய போட்டியில் புதிய இந்திய அணியை பார்க்கலாம்.


மாற்றம் வேண்டாம்:
மீதமுள்ள போட்டிகளில் சிறப்பாக விளையாட இந்திய வீரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகம் வேண்டும். வழக்கமான பேட்டிங் ஆர்டரில் எவ்வித மாற்றமும் செய்யும் முயற்சியில் இந்திய அணியினர் ஈடுபடக் கூடாது.

சேவக், காம்பிர் தான் துவக்க வீரர்களாக வரவேண்டும். ஏனெனில், இங்குள்ள சூழல் குறித்து இவர்கள் அதிகம் பழகிவிட்டனர். உலக சாம்பியன் என்பதை மனதில் வைத்துக் கொண்டு, வீரர்கள் செயல்பட்டால் சாதிக்கலாம்.

இவ்வாறு வாசிம் அக்ரம் கூறினார்.

0 comments:

Post a Comment