இந்திய அணியின் தோல்விக்கு ஐ.பி.எல்., காரணமா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்ததற்கு, ஐ.பி.எல்., போட்டிகள் தான் காரணம் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 3 டெஸ்டில் படுதோல்வி அடைந்த இந்திய அணி, தொடரை இழந்தது. இதற்கு பணம் கொழிக்கும் ஐ.பி.எல்., "டுவென்டி-20' போட்டிகளில் அதிகளவு பங்கேற்றதே காரணம் என கூறப்படுகிறது.

இது குறித்த தங்களது கருத்துக்களை இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பகிர்ந்து கொள்கின்றனர்,


வெங்சர்க்கார்:

இந்திய வீரர்களின் மோசமான ஆட்டத்துக்கு ஐ.பி.எல்., மட்டும் காரணமல்ல. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் துவங்குவதற்கு முன், தேவையான அளவு போட்டிகளில் பங்கேற்கவில்லை. இதுவே தோல்விக்கு வழி வகுத்தது. அன்னிய மண்ணில் விளையாடச் செல்லும் முன், முறையான பயிற்சி மேற்கொண்டிருக்க வேண்டும்.


சந்து போர்டே:

ஐ.பி.எல்., போட்டியை மட்டும் நாம் பழிக்க கூடாது. இந்திய பேட்ஸ்மேன்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வதில்லை. ஒரு சில அனுபவ வீரர்கள் போட்டி துவங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பாக ஆஸ்திரேலியா சென்றுவிட்டனர். இருந்தபோதும், ஏன் சோபிக்க தவறினர் என்று தெரியவில்லை.


பாபு நட்கர்னி:

இந்திய அணியின், அனுபவ வீரர்கள் வெவ்வேறு சூழ்நிலைக்கு ஏற்ப விரைவில் மாறும் தன்மை இல்லாமல் உள்ளனர். இது தோல்விக்கு முக்கிய காரணம். ஒருவேளை வீரர்கள் ஐ.பி.எல்., போட்டியில் விளையாடுவதால் டெஸ்டில் விளையாட முடியவில்லை என்று உணர்ந்தால், ஏதாவது ஒன்றில் பங்கேற்றுவிட்டு, ஒன்றை புறக்கணித்து விட வேண்டியது தான்.


ஆகாஷ் சோப்ரா:

இளம் வீரர்கள் டெஸ்டில் பின்னடைவை சந்திப்பதற்கு ஐ.பி.எல்., மட்டும் காரணம் கிடையாது. இக்கட்டான சமயங்களில் பொறுமையாக செயல்படும் குணம் வீரர்களிடம் இல்லை. தோல்விக்கான காரணத்தை இப்போதே கண்டறிந்து, சரியான தீர்வு காண வேண்டும்.


கவாஸ்கர்:

டெஸ்ட், ஐ.பி.எல்., போட்டிகளில் வீரர்களின் பேட்டிங் "ஸ்டைல்' மட்டுமே மாறுபடும். ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் ஐ.பி.எல்., போட்டியில் விளையாடியவர் தான். இவரால் மட்டும் எப்படி சாதிக்க முடிகிறது. எனவே இக்கருத்து முற்றிலும் தவறானது.


பிஷன்சிங் பேடி:

இந்திய அணியின் தொடர் தோல்விக்கு ஐ.பி.எல்., தான் முதன்மை காரணம். தவிர, கிரிக்கெட்டிற்கு ஒரு கொள்கை உண்டு. ஐ.பி.எல்., போட்டிக்கு எந்த விதமான கொள்கையும் இல்லை. இதில், பணம் மட்டுமே முக்கிய குறிக்கோள்.


மனோஜ் பிரபாகர்:

தற்போதுள்ள, இளம் வீரர்கள் பணம் கொழிக்கும் ஐ.பி.எல்., போட்டிகளில் விளையாடுவதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். இதே அளவு ஆர்வத்தினை ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் காட்டுவதில்லை. நீண்ட நாட்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்க வேண்டிய பணத்தை, ஒரு மாதத்தில் ஐ.பி.எல்., போட்டியில் பெற்று விடுகின்றனர்.


கட்டாயம் இல்லை

ஐ.பி.எல்., தலைவர் ராஜிவ் சுக்லா கூறுகையில்,""ஐ.பி.எல்., தொடரில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், ஷேன் வாட்சன் இடம் பெற்றுள்ளனர். இவர்களால் மட்டும் எப்படி சிறப்பான ஆட்டத்தை மற்ற போட்டிகளிலும் வெளிப்படுத்த முடிகிறது.

தவிர, ஐ.பி.எல்., தொடர் மே மாதமே முடிந்தது விட்டது. இதன் பின் நிறைய போட்டிகளில் இந்திய அணி பங்கேற்றுவிட்டது. மேலும் வீரர்களை யாரும் கண்டிப்பாக போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை,''என்றார்.

0 comments:

Post a Comment