அடிலெய்டில் சேவக் அடிப்பாரா? அடிபடுவாரா?

அன்னிய மண்ணில் சேவக்கின் மோசமான ஆட்டம் தொடர்கிறது. கடந்த 21 இன்னிங்சில் இரு முறை மட்டுமே அரைசதம் அடித்துள்ள இவர், அடிலெய்டு டெஸ்டில் மானம் காப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபகாலமாக அன்னிய மண்ணில் இந்திய டெஸ்ட் அணியின் துவக்கம் மோசமாக உள்ளது. இதனால் பின் வரிசை வீரர்கள் நெருக்கடிக்கு ஆளாகி, எளிதில் அவுட்டாக, தொடர் தோல்வியை அணி சந்திக்கிறது.

இதில் அதிரடி வீரர் சேவக், நான்கு ஆண்டுகளாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடரில், இவரது சராசரி ஒருமுறை கூட 30 ரன்களை தொடவில்லை.

இத்தனைக்கும் இங்கிலாந்து மற்றும் தற்போதைய தொடரை தவிர, மற்ற மூன்று தொடர்களில் நல்ல பார்மில் தான் இருந்தார். இருந்தும் அவர் ரன் சேர்க்காதது வியப்பை தருகிறது.


ஹர்பஜனுக்கு மோசம்:

இந்த போட்டிகளின் 21 இன்னிங்சில், சேவக் எடுத்த ரன்கள் 500ஐ எட்டவில்லை. இரு முறை மட்டும் தான் அரைசதம் அடித்தார். இது அன்னிய மண்ணில் ஹர்பஜன் சிங் எடுத்த ரன்களை விட மோசமான சராசரி. இதில் 16 முறை வேகப்பந்து வீச்சாளர்களிடம் ஒரே மாதிரியாக அவுட்டாகினார்.

அதாவது சரியான அளவில், பந்தை லேசாக"சுவிங்' செய்து வீசினால், விக்கெட் கீப்பர் அல்லது "சிலிப்' பகுதியில் "கேட்ச்' கொடுத்து விடுகிறார்.


நெருக்கடி தருமா:

தற்போது அணியின் கேப்டனாக வேறு பொறுப்பேற்றுள்ளார். இதற்கு முன் மூன்று முறை டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்த போட்டிகளில், ஒன்றில் கூட தோற்றதில்லை. இப்போட்டிகளில் 173 ரன்கள் தான் எடுத்தார். இதன் சராசரி 28.33 ஆகும். பொதுவாக கேப்டன் பணி இவரது பேட்டிங்கிற்கு கைகொடுக்கப் போவதில்லை. மாறாக நெருக்கடி தான் தரும்.


நிலைக்க வேண்டும்:

2008ல் அடிலெய்டு டெஸ்டில் சேவக் முதல் இன்னிங்சில் 63, இரண்டாவது இன்னிங்சில் 151 ரன்கள் எடுத்தார். இதனால் இம்முறையும் இந்திய அணியின் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து மானம் காக்க உதவுவார் என்று நம்பப்படுகிறது. இந்த டெஸ்டில் முதல் இரண்டு மணி நேரம் களத்தில் இருந்து விட்டால், அணியின் ஸ்கோர் 300 அல்லது அதற்கு மேல் செல்வது உறுதி.

ஒருவேளை மீண்டும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானால், கடந்த 26 மாதங்களில் பங்கேற்ற 25 டெஸ்டில், இதுவரை இல்லாத அளவுக்கு, இவரது சராசரி 50க்கும் கீழாக சென்றுவிடும்.

0 comments:

Post a Comment