தோனிக்கு தடை: சேவக் புதிய கேப்டன்

இந்திய அணிக்கு சோதனை மேல் சோதனை. தாமதமாக பந்துவீசிய விவகாரத்தில், தோனிக்கு ஒரு டெஸ்ட் போட்டிக்கு தடை விதிக்கப்பட்டது. நான்காவது டெஸ்டுக்கு கேப்டன் பொறுப்பை சேவக் ஏற்கிறார்.

பெர்த்தில் நடந்த மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இப்போட்டியில் சுழற்பந்துவீச்சாளர் இல்லாமல் நான்கு "வேகங்களுடன்' இந்தியா களமிறங்கியது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில், 2 ஓவர்கள் தாமதமாக பந்துவீச நேர்ந்தது. இது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) விதிமுறைப்படி தவறு.

இத்தகைய தவறை ஒரு ஆண்டில் மூன்று முறை செய்யலாம். சமீபத்தில் தான் இரண்டாக குறைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலையில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான பார்படாஸ் டெஸ்டில் தாமதமாக பந்துவீசிய பிரச்னையில் தோனி சிக்கினார்.

தற்போது இரண்டாவது முறையாக சிக்கியதால், இவர் மீது அம்பயர்கள் அலீம் தர், தர்மசேனா புகார் செய்தனர். இதனை விசாரித்த ஐ.சி.சி., "மேட்ச் ரெப்ரி' ரஞ்சன் மடுகுலே, தோனிக்கு ஒரு போட்டி தடை மற்றும் அபராதம் விதித்தார். சக வீரர்கள் அபராதத்துடன் தப்பினர். தனது தவறை ஒத்துக் கொண்ட தோனி, தண்டனையை ஏற்றுக் கொண்டார்.

இது குறித்து ஐ.சி.சி., வெளியிட்ட அறிக்கையில்,""நடத்தை விதிமுறையின்படி தாமதமாக பந்துவீசினால், ஒரு ஓவருக்கு வீரர்களின் போட்டி சம்பளத்தில் இருந்து 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்படும். கேப்டனுக்கு இரண்டு மடங்காக அபராதம் அதிகரிக்கப்படும்.

இந்திய அணி இரண்டு ஓவர்கள் தாமதமாக பந்துவீசியதால், வீரர்களுக்கு 20 சதவீதம், தோனிக்கு ஒரு போட்டி தடை மற்றும் 40 சதவீதம் அபராதம் விதிக்கப்படுகிறது,''என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 24ம் தேதி அடிலெய்டில் துவங்கும் நான்காவது டெஸ்டில் தடை காரணமாக தோனி இடம் பெற முடியாது. இவருக்கு பதிலாக அணியின் கேப்டன் பெறுப்பை சேவக் ஏற்க உள்ளார். விக்கெட் கீப்பர் பணியை விரிதிமன் சகா ஏற்பார்.

0 comments:

Post a Comment