இந்தியாவிடம் வீழ்ந்தது பாக்.


"டுவென்டி-20' உலக கோப்பை பயணத்தை நடப்பு சாம்பியன் இந்திய அணி வெற்றியுடன் துவக்கியது. நேற்று நடந்த பயிற்சி போட்டியில் ரோகித் சர்மா, காம்பிரின் அதிரடி ஆட்டம் கைகொடுக்க, பாகிஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பராக வீழ்த்தியது. இங்கிலாந்தில் "டுவென்டி-20' உலக கோப்பை தொடர் நாளை துவங்குகிறது. அதற்கு முன்னதாக நேற்று இரவு நடந்த பயிற்சி போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் யூனிஸ் கான், பேட்டிங் தேர்வு செய்தார்.

அப்ரிதி ஏமாற்றம்: துவக்கத்தில் இந்திய "வேகங்கள்' அசத்தினர். பிரவீண் குமார் வீசிய முதல் ஓவரில் ஹசன்(0) வெளியேறினார். கம்ரான் அக்மல்(19) ரன் அவுட்டானார். இஷாந்த் பந்துவீச்சில் அகமது(25) வீழ்ந்தார். மிகவும் எதிர்பார்க்கப் பட்ட அப்ரிதி, இர்பான் பந்தில் "டக்' அவுட்டானார். பொறுப்பாக ஆடிய கேப்டன் யூனிஸ் கான் 32 ரன்கள் எடுத்தார். ஓஜா சுழலில் சோயப் மாலிக்(14) சிக்க, பாகிஸ்தான் 5 விக்கெட்டுக்கு 63 ரன்கள் எடுத்து திணறியது. கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய மிஸ்பா(37*), யாசிர் அராபத்(25*) அணிக்கு கைகொடுத்தனர். பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்தது.
ரோகித் அசத்தல்: சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு காம்பிர், ரோகித் சர்மா இணைந்து சூப்பர் துவக்கம் தந்தனர். பாகிஸ் தான் பவுலர்களை ஒருகை பார்த்த இவர்கள் மிகவும் "கூலாக' ஆடினர். குல் வீசிய முதல் ஓவரிலேயே காம்பிர் இரண்டு பவுண்டரி விளாசினார். சேவக் இடம் பெறாத குறையை போக்கிய ரோகித், யாசிர் பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்தார். இவர் 80 ரன்களுக்கு(9 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் தோனி "கம்பெனி' கொடுக்க காம்பிர் அரைசதம் கடந்தார். இந்திய அணி 17 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. காம்பிர்(52), தோனி(9) அவுட்டாகாமல் இருந்தனர். கடந்த முறை பைனலில் இந்தியாவிடம் தோல்வி அடைந்த பாகிஸ் தான் இம்முறை பயிற்சி போட்டியிலேயே படுமோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

0 comments:

Post a Comment